ஒட்டப்பிடாரத்தில் சுயேச்சையாக போட்டி? அதிமுகவை மிரட்டும் கிருஷ்ணசாமி!

Admk candidates for 4 constituency by-elections may be announced today evening

by எஸ். எம். கணபதி, Apr 23, 2019, 10:19 AM IST

நான்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு உட்கட்சிப் பூசலே காரணம் என்று கூறப்படுகிறது. ஒட்டப்பிடாரத்தில் தனது மகனுக்கு சீட் தராவிட்டால், சுயேச்சையாக களமிறங்கப் போவதாக புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அ.தி.மு.க.வை மிரட்டுகிறாராம்!

தமிழகத்தில் காலியாக உள்ள ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிக்கு வருகிற மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணியை துவக்கி விட்டன.

இந்நிலையில் அதிமுக சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கி வெகுநேரம் நீடித்தது. ஆனால், இறுதியில் வேட்பாளர்களை அறிவிக்காமல் முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சென்று விட்டனர்.

இன்று மாலைக்குள் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் வரும் 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்றும் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். வேட்பாளர்களை அறிவிப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறிக்கான காரணம் உட்கட்சிப் பூசல்தான் என்றும் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் தேர்வின்போதே மதுரை மாவட்டத்தில் சிக்கல் ஏற்பட்டது. மதுரை தொகுதியை முன்னாள் மேயர் ராஜன்செல்லப்பா தனது மகன் ராஜ்சத்யனுக்கு கேட்டிருந்தார். நீண்ட நாட்களாகவே அவருக்கும், அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. ஆனால், அமைச்சர் உதயக்குமாரை எதிர்ப்பதில் இருவரும் ஒன்று சேர்ந்தனர். காரணம், அமைச்சர் உதயக்குமார், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகண்ணப்பனை அழைத்து வந்து அவருக்குத்தான் மதுரை மக்களவை தொகுதி சீட் தர வேண்டும் என்று அடம் பிடித்தார்.

ஏற்கனவே உதயக்குமார், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு வந்து அரசியல் செய்வது செல்லூர்ராஜூ, ராஜன்செல்லப்பா ஆகியோருக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில், பணவசதி படைத்த ராஜ கண்ணப்பனும் மதுரைக்குள் வந்து விட்டால் அது ஆபத்து என்று பயந்து செல்லூர் ராஜூவும், ராஜன்செல்லப்பாவும் அவரை அனுமதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதன்படி, ராஜ்சத்யனுக்குத்தான் சீட் தரப்பட்டது. ஆனாலும், உதயக்குமாரை சமாதானப்படுத்த மதுரை மாவட்டத்தை மூன்றாக பிரித்து அவருக்கும் மாவட்டச் செயலாளர் பதவி தரப்பட்டது.

இந்த சூழ்நிலையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் யாருக்கு சீட் தருவது என்பதிலும் மோதல் நிலவுகிறது. மறைந்த எம்.எல்.ஏ. போஸ் குடும்பத்தில் ஒருவரை நிறுத்தலாம் என்று உதயக்குமார் கூறுகிறாராம். அதேசமயம், சர்ச்சைகளில் சிக்கி பிரபலமான சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சீட் தர வேண்டுமென செல்லூர் ராஜூ வலியுறுத்துகிறாராம்.

இதே போல், சூலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமியை நிறுத்துவதற்கு எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் விரும்புகிறார்களாம். ஆனால், செ.ம.வேலுசாமி மீண்டும் பலம் பெறுவதை விரும்பாத அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மறைந்த எம்.எல்.ஏ. கனகராஜின் மனைவி அல்லது மகன் கந்தசாமிக்கு சீட் கொடுக்கச் சொல்கிறாராம்.

அரவக்குறிச்சியில் செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமிக்கு சீட் தர முதலமைச்சர் எடப்பாடி விரும்புகிறாராம். ஆனால், அவர் பலமான வேட்பாளராக இருக்க மாட்டார் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எதிர்ப்பு தெரிவிக்கிறாராம். அவர் தனது ஆதரவாளர் ஒருவரைத்தான் நிறுத்த வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளாராம்.

ஒட்டப்பிடாரம் தொகுதியை தனது மகன் ஷ்யாமுக்கு ஒதுக்க வேண்டுமென்று புதியதமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டுள்ளாராம். மேலும், சீட் தராவிட்டால் தான் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கப் போவதாகவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளாராம். அவர் ஏற்கனவே அங்கு வெற்றி பெற்றிருக்கிறார் என்பதால், அவரை விட்டு விடுவதற்கு அ.தி.மு.க. தலைமை தயக்கம் காட்டுகிறது. ஆனால், அவருக்கு சீட் தருவதை உள்ளூர் அ.தி.மு.க.வினர் ஏற்கவில்லையாம்.

இப்படியாக நான்கு தொகுதிகளிலுமே வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மோதல்கள் இருக்கிறதாம். அதனால்தான், எல்லோரையும் சமாதானப்படுத்தி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளார்களாம். ஆனாலும் இன்று மாலைக்குள் அறிவிக்கப்பட்டு விடுவார்களாம்!

கிருஷ்ணசாமியா? கிருஷ்ணமூர்த்தியா? தேர்தல் பிரசாரத்தின் போது கன்ஃப்யூஸ் ஆன எடப்பாடி பழனிசாமி

You'r reading ஒட்டப்பிடாரத்தில் சுயேச்சையாக போட்டி? அதிமுகவை மிரட்டும் கிருஷ்ணசாமி! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை