ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கப் பதக்கம் வென்றார்.
23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய போட்டியில், ஓட்டப் பந்தயம், ஸ்டீபிள்சேஸ் (தடை தாண்டும் குதிரை ஓட்டம்), ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில், முதல் நாள் முதலே இந்திய வீரர்கள் தனி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதன் வகையில், 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் அவினாஷ் சாபிள், ஈட்டி எறிதல் பிரிவில் அன்னுராணி ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற டூட்டி சந்த் தனது தேசிய சாதனையை முறியடித்து, அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி மாரிமுத்து, 2 நிமிடம் 02.70 வினாடிகளில் 800 மீட்டர் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் தங்கம் இதுவாகும். 30 வயதான கோமதி, திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியைச் சேர்ந்தவர். கடந்த மாதம் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை போட்டியில் பங்கேற்ற கோமதி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கத்தை வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.