துறையூரில் உள்ள கருப்பசாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 7பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உரிய அனுமதி வாங்காமல் விழாவை நடத்திய பூசாரி தனபாலை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள முத்தையம் பாளையம் கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோவிலில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிடிக்காசு வாங்க பக்தர்கள் முண்டியடித்துச் சென்றதால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில், கரூர் மாவட்டம் நன்னியூரை சேர்ந்த லட்சுமிகாந்தன் (60), கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராஜவேல் (55), பின்னாத்தூர் பூங்காவனம் (50), சேலம் மாவட்டம் திருமானூர் மங்களாபுரம் காந்தாயி (38), நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் கோனாட்சி மரம் சாந்தி (50), பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை புள்ளான்குளம் ராமர் (50), விழுப்புரம் மாவட்டம் வடபொன்பரப்பி வள்ளி (35) ஆகிய 7 பேர் உயிரிழந்தனர்.
கருப்பசாமி கோவில் தனியார் கோவிலாக இருந்தாலும், திருவிழாவுக்கு இந்து சமய அறநிலைத் துறையிடம் உரிய அனுமதி வாங்காத காரணத்தால், விழாவிற்கான முறையான பாதுகாப்பு போட முடியவில்லை எனக் கூறிய போலீசார் அக்கோயிலின் பூசாரி தனபாலை கைது செய்துள்ளனர்.
பூசாரி தனபால் தையல் வேலை பார்த்துக் கொண்டே பூசாரியாகவும் செயல்பட்டு வந்துள்ளார். மேலும், இதுபோன்ற பல ஊர்களில் கருப்பசாமி கோயில்களை நடத்தி வந்த தனபால், அங்கெல்லாம் ஏற்பட்ட பிரச்னை காரணமாக துறையூருக்கு வந்து கோவில் கட்டியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.