அலுவலக வேலை உள்ளிட்ட ஏதாவது ஒன்று மனஅழுத்தத்திற்கு (stress) காரணமாகும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சர்க்கரை நோய் என்னும் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் கவனமாக இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நம் இரத்தத்திலுள்ள குளூக்கோஸின் அளவு, இரண்டு தொகுப்பான ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. முதல் தொகுப்பு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் பணியை செய்யும். இந்தத் தொகுப்பில் இன்சுலின் மட்டுமே உள்ளது. கொர்டிஸால், அட்ரீனலின், நார்அட்ரீனலின், குளூக்ககான் மற்றும் வளர்ச்சி ஹார்மோன் ஆகியவை இரண்டாம் தொகுப்பை சார்ந்தவை. இவை இன்சுலினுக்கு எதிராக செயல்படும். ஆகவே, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்வதற்கு இரண்டாம் தொகுப்பு ஹார்மோன்கள் காரணமாகின்றன.
மன அழுத்தத்தின் காரணமாக இரண்டாம் தொகுப்பு ஹார்மோன்கள் உயரக்கூடும் என்று கருதப்படுகிறது. இரண்டாம் தொகுப்பு ஹார்மோன்களின் அளவு உயரும்போது அல்லது தொடர்ந்து அதிகமாக இருக்கும்போது, நீரிழிவு நோய் உருவாவதற்கும் ஏற்கனவே பாதிப்புள்ளோருக்கு நிலைமை மோசமாகவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
உடல் அல்லது மனம் சார்ந்த பதற்றத்திற்குக் காரணமாகும் உடல், வேதியியல் அல்லது உணர்ச்சி சார்ந்த காரணியே மனஅழுத்தம் எனப்படுகிறது. ஓரளவுக்கு மனஅழுத்தம் அனைவருக்குமே நல்லது என்றும் மனஅழுத்தம், மனிதர்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது என்றும் வல்லுநர்கள் கருதுகிறார்கள். ஆனால், மனஅழுத்தத்தின் அளவு அதிகமாவதும், தாங்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ளாமல் இருப்பதும் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும்.
பலருக்கு தாங்கள் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதே தெரியாது. ஐம்பது வயது தாண்டிய பெண்மணி ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர் சிகிச்சை காரணமாக, அவருக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருந்தது. திடீரென அவருக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 500 mg/dL ஐ தாண்டி விட்டது.
என்னென்னவோ மருந்துகள் கொடுத்தும் சர்க்கரையின் அளவு 350 mg/dL என்ற அளவுக்குக் கீழ் வரவில்லை. அவரது அலுவலக பின்னணி குறித்த விவரங்களை அறிந்தபோது, வேலை காரணமாக அவர் மனஅழுத்தம் அடைந்திருப்பது மருத்துவர்களுக்குத் தெரிய வந்தது. அதற்காக தொடர்ந்து ஆலோசனைகள் கொடுத்து, மனஅழுத்தத்தை குறைத்ததன் மூலம் சர்க்கரையின் அளவை மீண்டும் மருத்துவர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தங்களுக்கு மனஅழுத்தம் இருப்பதை கண்டறிந்து அல்லது மருத்துவர்கள் கூறுவதை ஒப்புக்கொண்டு, அதை சரிப்படுத்த ஒத்துழைக்கும் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்ளும் மருந்தின் அளவு குறைவதாகவும், சிலருக்கு மருந்து சாப்பிட வேண்டிய கட்டாயமே இல்லாமல் போவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த அளவுக்கு இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதற்கு மனஅழுத்தம் காரணமாகிப் போகிறது.
மன அழுத்தம் ஏற்படாமல் எச்சரிக்கையாய் இருந்தால் சர்க்கரை நோய் பாதிப்பில்லாமல் மகிழ்ச்சியாக வாழ முடியும்!