டிரட்மில், ஜாகிங் - எதில் பயன் அதிகம்?

Treadmill Vs Jogging - Which One Helps You Lose More Calories?

by SAM ASIR, Mar 26, 2019, 15:28 PM IST
'ஜாகிங்' (jogging)- பெருநகரம், நகரம் என்றில்லாமல் இப்போது கிராமங்கள் வரை பரவியிருக்கும் பழக்கம் இது. பலர் காலையில்து எழுந்து பரபரப்பாக கிளம்பி புறப்பட்டால்கூட, எதிரில் மெதுவாக ஓடிவரும் எத்தனையோ நபர்களை கடந்துதான் பேருந்து நிறுத்தத்திற்கோ, ரயில் நிலையத்திற்கோ செல்ல முடியும்.
 
இன்னும் ஒரு தரப்பினர், "வெளியே ஓடுவதெல்லாம் முடியாது," என்று முடிவெடுத்து, வீட்டிலேயே டிரட்மில் (treadmill) வாங்கி வைத்துள்ளனர். பெரும்பாலான வீடுகளில் 'டிரட்மில்' பயன்படுத்தப்படாமல் இடத்தை அடைத்துக்கொண்டு இருப்பது வேறு விஷயம். நாம் பயன்படுத்துபவர்களை பற்றி தான் பேசுகிறோம்!
 
பலருக்கு டிரட்மில், ஜாகிங் இரண்டில் எது உடலுக்கு அதிக நன்மை செய்கிறது என்ற கேள்வி உள்ளது. இரண்டுமே உடலை முன்னோக்கி அசைப்பதான உடற்பயிற்சி தொடர்புடையவை. இரண்டுமே இருதய நலனுக்காக, உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதற்காக செய்யப்படுபவை. டிரட்மில், ஜாகிங் இரண்டும் ஒன்றுபோல் தோன்றினாலும், இரண்டுக்கும் இடையே பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன.
 
டிரட்மில் - எளிதானது: ஒரே இடத்தில் இருப்பதால், ஓடும் பகுதி சமதளமாக இருப்பதால் ஜாகிங் செல்வதை காட்டிலும் டிரட்மில்லில் ஓடுவது எளிதானது. 
 
ஜாகிங் செல்ல வேண்டுமானால், வீட்டுக்கு வெளியே நல்ல கால சூழ்நிலை வேண்டும். ஓடும் பகுதி சீராக இருக்கும் என்று கூற இயலாது. 
 
நமக்கு வேண்டிய அளவுக்கு டிரட்மில்லை சாய்தளமாக அமைத்துக்கொள்ள முடியும்.
டிரட்மில் - வசதியானது: நினைத்த மாத்திரத்தில் ஜாகிங் சென்று விட முடியாது. ஆனால், டிரட்மில் வீட்டிலோ, உடற்பயிற்சி கூடத்திலோ உள்ளே இருப்பதால் நாம் நினைத்த நேரத்தில் அதை பயன்படுத்திக் கொள்ள முடியும். புறச்சூழல் நாம் பயிற்சி செய்வதை தடுக்க இயலாது.
 
டிரட்மில் - உத்வேகம் அளிக்கும்: நீங்கள் எவ்வளவு ஓடுகிறீர்கள் என்ற அளவை டிரட்மில்லில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்தத் தரவுகளின் அடிப்படையில் முந்தைய அளவுகளை தாண்டி ஓடுவதற்கு இலக்கு நிர்ணயித்துக்கொள்ள இயலும். ஆகவே, டிரட்மில் ஊக்கமளிக்கக்கூடியது. ஜாகிங் செல்வோரால் தாங்கள் எவ்வளவு ஓடினோம் என்பதை திட்டமாக அறிந்திட இயலாது.
 
ஆற்றல் (கலோரி) செலவாகிறது: டிரட்மில் பயன்படுத்துவதற்கு பதிலாக வெளியே சென்று ஓடும்போது பல்வேறு காரணிகள் நம்மை தடுக்கின்றன. வாகாக இல்லாத சூழலில் ஓடும்போது அதிக ஆற்றல் செலவாகிறது. டிரட்மில்லில் அப்படி செலவாகிறதில்லை.
 
ஆனால், நமக்குத் தேவைப்படும்போது டிரட்மில்லில் வேண்டிய மாற்றங்களை செய்து, தேவையான ஆற்றல் செலவாகும்படி நிர்ணயித்துக் கொள்ளலாம்.
உடற்பயிற்சி செய்வது நல்ல விஷயம். இதுவா? அதுவா? என்று கேள்வி கேட்டுக்கொண்டிருக்காமல் ஏதாவது ஒன்றையாவது செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. டிரட்மில் மற்றும் ஜாகிங் இரண்டையும் சேர்த்து செய்ய முடிந்தாலும் நல்லதுதான்!

You'r reading டிரட்மில், ஜாகிங் - எதில் பயன் அதிகம்? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை