நீங்கள் காஃபி பிரியரா? காஃபி செய்யும் வேலையை பாருங்க!

Coffee - Is It Good Or Bad For Your Digestion?

by SAM ASIR, Jun 10, 2019, 20:16 PM IST

'ஃபில்டர் காபி', 'கும்பகோணம் டிகிரி காபி' என்று வகைவகையான பெயர்களை காஃபிக்கு வைத்து மகிழ்வதோடு, அதை விரும்பியும் குடிக்கிறோம். பலருக்கு காஃபி இல்லாமல் நாளே விடியாது. பாலை எப்படி காய்ச்சி, எந்த வகை காஃபிதூளை கலந்து காஃபி போடுவது ருசி என்று விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதையும் கேட்க முடியும்.

காஃபி, மலச்சிக்கலையும் உடலில் உட்கொள்ளப்படும் சர்க்கரையின் அளவையும் குறைக்கக்கூடிய தன்மையை கொண்டது எனினும் அதை தொடர்ந்து அருந்துவதால் சில எதிர்மறை விளைவுகளும் உடலுக்கு விளைகின்றன.

காஃபைன் என்பது ஊக்கம் தரக்கூடிய மருந்து போன்றதுதான். ஆனால், தடைவிதிக்கப்படாதது. காஃபைனை அதிகஅளவில் காஃபியின் மூலம் எடுத்துக்கொள்வது உணவு மண்டலத்தை சிறிது சிறிதாக பாதிக்கும்.

அதிகரிக்கும் அமிலத்தன்மை

நாம் அருந்தும் காஃபியில் பல்வேறு விதமான எண்ணெய்கள், அமிலங்கள் இவற்றுடன் காஃபைனும் உள்ளது. இந்தப் பொருள்கள் இணைந்து நம் செரிமான மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதிகமான காஃபி அருந்துவதால் நம் வயிறும் சிறுகுடலின் உள்புற சுவர்களும் பாதிக்கப்படும். காஃபி அருந்தும்போது அதை செரிப்பதற்காக வயிறு அதிகஅளவு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கும். ஆண்டுக்கணக்கில் வெறும் வயிற்றில் காஃபியை குடித்துவந்தால், ஹைட்ரோகுளோரிக் அமில சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டு, உணவு செரிப்பதில் சிரமம் ஏற்படும். உணவிலுள்ள புரதச்சத்து மற்றும் கொழுப்புச் சத்துக்கள் உடைக்கப்படும் ஒழுங்கு குலைவதால் வேண்டாத வாயுக்கள் வயிற்றில் உருவாகி வாயு தொல்லை தோன்றும்.

அல்சர் உள்ளிட்ட வயிற்று உபாதைகள்

வயிற்று உபாதை உள்ளவர்கள் காஃபி அருந்தும்போது நிலைமை இன்னும் மோசமாகிறது. வாயு தொல்லை, குடல் அழற்சி என்னும் அல்சர் உள்ளிட்ட குறைபாடுகள் உருவாக காஃபி காரணமாகிறது. காஃபி கொட்டையில் உள்ள சில நொதிகள் என்னும் என்சைம்கள் உணவு குழலை பாதிக்கக்கூடியவை.

நெஞ்செரிச்சல்

காஃபி அருந்துவதால் உணவு குழலை சுற்றியுள்ள தசைகள் தளர்வு நிலையை அடைகின்றன. இந்தத் தசைகள் தளர்வடைவதால் செரிமானம் தடைபடுகிறது. வயிற்றில் செரிமானத்திற்காக இருக்கும் அமிலம் உணவு குழலுக்குள் வருகிறது. அதனால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

அரைகுறை செரிமானம்

உணவு மண்டலத்தில் குடல் அசைவு இயக்கம் அல்லது அலை இயக்கம் நடைபெறுவது இயல்பு. இது உணவு, செரிமான மண்டலத்தினுள் செல்ல உதவுகிறது. இந்த அலைஇயக்கத்தை காஃபி தூண்டுகிறது. நாம் உணவு சாப்பிட்டவுடன் அருந்தும் காஃபி, குடல் அசைவு இயக்கத்தை தூண்டுவதால், உணவு சரியாக செரிமானம் ஆகாமலேயே சிறுகுடலுக்கு அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக சிறுகுடல் சேதமடைகிறது; ஊட்டச்சத்துகள் உடலில் கலப்பதில் குழப்பம் ஏற்படுகிறது.

கழிவாய் போகும் தாது சத்துகள்

நம் வயிற்றினுள் இரும்பு மற்றும் கால்சியம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் ஆகிய உடல்கள் உணவிலிருந்து பிரிக்கப்பட்டு உடலில் சேர்வதால் மட்டுமே நமக்கு போதிய சத்து கிடைக்கிறது. காஃபி, வயிற்றில் இரும்பு பிரிதலையும், சிறுநீரகம் கால்சியம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுகளை பிரிப்பதையும் தடை செய்கிறது. இதனால் வயிற்று உபாதைகள் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளும், இழப்புகளும் உடலுக்கு நேர்கிறது.

காஃபி குடிக்கும் முன்னர் ஒரு கணம் யோசித்துவிட்டு குடிப்பது நல்லது!

More Health News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை