எந்த வசதியும் செய்து தரவில்லை - தமிழக அரசுக்கு எதிராக ஐ.ஜி.பொன். மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

Police IG pon.manickavel files contempt of court case in HC against TN govt:

by Nagaraj, Jun 10, 2019, 20:21 PM IST

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு போதிய வசதிகளையும், அலுவலர்களையும் நியமிக்கவில்லை என அப்பிரிவின் சிறப்பு அதிகாரி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், தலைமைச் செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழகத்தில் சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க, ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிறப்புக் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. அவர் பொறுப்பேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். தயவு தாட்சண்யமின்றி அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் முதல் பல்வேறு அதிகாரிகள் மீது கைது நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் தமிழக அரசுத் தரப்பில் அவருக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதனால் பொன்.மாணிக்கவேலுக்கும் அரசுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படத் தொடங்கியது.

இந்நிலையில் பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றார். அவருக்கு பணி நீட்டிப்பு செய்ய தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. இதனால் சென்னை உயர் நீதிமன்றமே தலையிட்டு அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கி, மீண்டும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்தது.

இதன் பின்பு,சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு போதிய வசதிகளை அரசு செய்து கொடுக்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வந்தார். உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். நீதிமன்றமும் போதிய வசதிகளை செய்து தர அரசுக்கு உத்தரவிட்டும் தேவையான காவலர்கள், வாகன வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தரவில்லை என பொன். மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ள பொன்.மாணிக்கவேல்,
தலைமைச் செயலர், உள்துறை செயலர், டிஜிபி ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார்.
மேலும், சிலைக்கடத்தல் தொடர்பாக 43 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகியுள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

You'r reading எந்த வசதியும் செய்து தரவில்லை - தமிழக அரசுக்கு எதிராக ஐ.ஜி.பொன். மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை