பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டிய அடிப்படை ஆரோக்கிய பழக்கங்கள்

5 Habits Parents Should Teach Their Children - Know More!

by SAM ASIR, Jun 28, 2019, 18:57 PM IST

பிள்ளைகளை பிரசவிப்பதோடு பெற்றோரின் கடமை முடிந்துவிடுவதில்லை. அவர்களை நல்ல முறையில் வளர்ப்பதே முக்கியம். குழந்தைகளின் முதல் ஆசிரியர் பெற்றோரே.

சரியான நடத்தை நெறிமுறைகள், பழக்கவழக்கங்கள், மனப்பக்குவம் இவையெல்லாவற்றையும் பெரும்பாலும் பெற்றோரிடமிருந்தே பிள்ளைகள் கற்றுக்கொள்கின்றனர். ஆகவே, எதிர்காலத்தில் பிள்ளைகள் என்னென்ன பழக்கவழக்கங்களை கொண்டிருக்கவேண்டும் என்று விரும்புகிறோமோ அவற்றை அவர்களுக்குப் போதிப்பதில் கருத்தாய் இருக்கவேண்டும்.

ஆரோக்கியமான உணவு:

குழந்தைகளின் நாட்டம் பெரும்பாலும் ஜங்க் ஃபுட் என்னும் நொறுக்குத் தீனிகள் பேரில்தான் இருக்கும். ஆரோக்கியமான உணவை அவர்கள் தவிர்க்கவே செய்வார்கள். ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவத்தை பிள்ளைகளுக்குப் புரியவைப்பது பெற்றோரின் கடமை. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் பற்றியும் அவை எந்தெந்த உணவு பொருள்களில் இருக்கின்றன என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும்.

நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதன் மூலம் வரக்கூடிய தீமைகளையும் பிள்ளைகளுக்குப் புரிவதுபோல் விளக்கவேண்டும். பல வகை பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் அவசியத்தையும் ஆரோக்கியமான உணவு பொருள்களை சாப்பிடுவது எதிர்காலத்தில் என்னென்ன நன்மைகளுக்குக் காரணமாக விளங்கும் என்பதையும் புரிய வைக்கவேண்டும்.

மேசை நாகரிகம்:

வழக்கமாக குழந்தைகள் சாப்பிட்ட இடம், உணவு துணுக்குகள் சிதறி அசுத்தமாக இருக்கும். ஆகவே, சாப்பிடும்போது கடைபிடிக்கவேண்டிய முறைகளை பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்லவேண்டும். வீட்டில் சாப்பிடும்போது கிடைக்கும் சுதந்திரம், பொது இடங்களில் சாப்பிடும்போது கிடைக்காது என்பதையும், மற்றவர்களுடன் அமர்ந்து சாப்பிடும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறவேண்டும்.
எந்தெந்த உணவினை எப்படி சாப்பிட வேண்டும் என்று, குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட வேண்டிய முறைகளை சரியானபடி போதித்தால் அவர்கள் நாளடைவில் அதில் தேர்ச்சி பெற்றுவிடுவார்கள்.

பல் துலக்குதல்:

பற்களின் முக்கியத்துவம் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகே தெரிய ஆரம்பிக்கும். பற்களை பாதுகாப்பதன் அவசியத்தை பிள்ளைகளுக்குப் பெற்றோர் விளக்கவேண்டும். பற்களை முறையாக பராமரிக்காவிட்டால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பதை கூறுவது அவசியம். நாள்தோறும் காலையில் எழுந்த உடன் மற்றும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு என்று இருமுறை பற்களை துலக்குவதன் அவசியத்தை புரிய வைக்கவேண்டும். பெற்றோர் வழிநடத்தாவிட்டால் பிள்ளைகளுக்கு பற்களை பாதுகாக்கவேண்டிய அவசியம் தெரியாமலே போகலாம். பற்சிதைவு, சொத்தை போன்ற ஆரோக்கிய கேடுகள் வந்து தொல்லை தரக்கூடும்.

படுக்கைக்குச் செல்லும் நேரம்:

போதுமான நேரம் உறங்கவேண்டியது பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று. இரவில் நெடுநேரம் விழித்திருக்காமல், சரியான நேரத்திற்குப் படுக்கைக்குச் செல்ல பிள்ளைகளை பழக்கவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்கும்.

வெளியில் விளையாடுதல்:

வீட்டுக்கு வெளியே விளையாடுவதற்கு பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும். வீட்டினுள்ளேயே இருந்தால் சோம்பலாக பழகிவிடுவதற்கும், உடல் பருமனாவதற்கும் வாய்ப்புண்டு. கண்டிப்பாக ஓடியாடி விளையாட வேண்டும். ஆகவே, மைதானத்தில், பூங்காவில் அல்லது நடமாட்டமில்லாத தெருக்களில் பிள்ளைகளை விளையாட பழக்குவிப்பது அவசியம்.

You'r reading பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டிய அடிப்படை ஆரோக்கிய பழக்கங்கள் Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை