கையில் மொபைல் போன் இருக்கிறது. ஆனால், வைஃபை, சிக்னல், புளூடூத் தொடர்பு எதுவுமில்லை. என்ன பயன்? இந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் குறுஞ்செய்தி (text) அனுப்பலாம்; மற்றவருடன் பேசலாம் என்று ஆப்போ (Oppo) அலைபேசி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் "ஆப்போ போன் உள்ள இருவர், நெட்வொர்க் இருந்தாலும் பேசலாம்; இல்லாமலும் பேசலாம்" என்ற நிலை உருவாகியுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த மொபைல் உலக மாநாட்டில் ஆப்போ நிறுவனம் அறிவிப்பு ஒன்றை செய்துள்ளது. அதன்படி, மெஷ்டாக் (MeshTalk) என்ற முறையில் பயனர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியும் என்றும் வைஃபை போன்ற இணைய தொடர்புகள் மற்றும் அலைபேசி சேவை நிறுவனங்களின் தொடர்பு இல்லாவிட்டாலும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு செய்திகளை அனுப்புவதற்கும் பேசுவதற்கும் முடியும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
மெஷ்டாக் வசதி கொண்ட போன்கள் தங்களுக்குள் ஒரு தொடர்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளும். தொலைவில் இருக்கும் போனுக்கு அனுப்பப்படும் செய்திகள் வழியில் உள்ள போன்கள் வழியாக கடத்தப்படும். அலைபேசி தொடர்பு கிடைக்காத அவசர காலங்கள் மற்றும் மூடப்பட்ட அரங்குகளிலும் ஆப்போ நிறுவனத்தின் மெஷ்டாக் வேலை செய்யும்.
ஆகவே, இது ஆபத்தில் உதவும் ஆபத்பாந்தவனாய் விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்போ போன்களில் 72 மணி நேரத்திற்கு தேவையான மின்னாற்றல் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். மெஷ்டாக் இயங்குவதற்கு அதிக அளவில் மின்னாற்றல் செலவழியாது.
இப்போதுள்ள ஆப்போ போன்களுக்கு இந்த தொழில்நுட்பம் பயன்படுமா அல்லது இனி வரும் தயாரிப்புகளில் மட்டும் இடம் பெறுமா என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.