‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்!’ என்று மழையைப் போற்றியது தமிழ் இலக்கியம். மழை நல்லதுதான். ஆனால், மழைக்காலம் சில சிரமங்களையும் தருகிறது. சற்று முன்னெச்சரிக்கையோடு இருந்தால் மழையால் நேரக்கூடிய தொல்லைகளை தவிர்க்கலாம்.
மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் இருப்பதின் காரணமாக குழந்தைகளுக்கு சருமத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். தாலேட்ஸ், பாரபின், ஆல்கஹால், செயற்கை வண்ணம், தாது எண்ணெய் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்பட்ட பொருள்கள் அடங்கிய எந்த தயாரிப்பையும் குழந்தைகளின் சருமத்தின்மேல் பூசக்கூடாது.
குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்க செய்ய வேண்டியவை:
குழந்தைகளை குளிப்பாட்ட மிருதுவான, மூலிகைகள் அடங்கிய சோப்புகளை பயன்படுத்த வேண்டும். மூலிகை அடங்கிய சோப்புகள் குழந்தையின் சருமத்தை மென்மையாகவும், நீர்ச்சத்து கொண்டதாகவும் பராமரிக்கும். ஆலிவ் எண்ணெய் மற்றும் வாதுமை எண்ணெய் அடங்கிய சோப்பு சருமத்தை பாதுகாக்கும். ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு ஊட்டச்சத்து அளிக்கிறது; வாதுமை எண்ணெய் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை அளிக்கிறது.
பச்சை பயிறு மற்றும் கொண்டை கடலை ஆகியவற்றை சேர்த்து குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். பச்சை பயிறு சருமத்தை மிருதுவாக பராமரிக்கும்; கொண்டை கடலை சருமத்திற்கு இதமளிக்கும்.
வாரத்திற்கு இருமுறை குழந்தைகளை தலைக்குக் குளிப்பாட்டலாம். குழந்தையின் தலையில் உலரக்கூடிய வகையில் தோல் திட்டுகளாக இருக்கும். தலைக்குக் குளிப்பது இவற்றை போக்கி, தலையின் மேலுள்ள சருமத்திற்கு புத்துணர்வு அளிக்கும்.
சப்பாத்திக்கள்ளி மலர் மற்றும் கொண்டை கடலை அடங்கிய மிருதுவான ஷாம்பூவையும் பயன்படுத்தலாம். சப்பாத்திக்கள்ளி மலர் தலைமுடியை பராமரிக்கக்கூடியது. கொண்டை கடலை தலைமுடிக்குத் தேவையான சத்தினை அளிக்கும்.
கற்றாழை, கோரைப் புல் மற்றும் கடுகு எண்ணெய் ஆகியவை அடங்கிய கேலமைன் லோஷனையும் பயன்படுத்தலாம். இது சருமத்தில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்தும்.
குளித்து முடித்த பிறகு, வாதுமை எண்ணெய் மற்றும் ஆயுர்வேத மருந்தான யாஸதா பாஸ்மா அடங்கிய கிரீமை பூசிய பின்னர், டயப்பரை போடலாம். வாதுமை எண்ணெய் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும். யாஸதா பாஸ்மா, சருமத்தில் அழற்சி ஏற்படாமல் பாதுகாக்கும்.
மழைக்காலங்களில் குழந்தைகளை சுத்தமாகவும், உடலை நன்கு துடைத்தும் வைக்கவேண்டும். டயப்பர்களை குறித்த இடைவெளியில் மாற்ற வேண்டும். இதுபோன்ற சிறு காரியங்களில் கருத்தாய் இருந்தால் மழலைச்செல்வங்களின் சருமத்திற்கு பாதிப்பு வராமல் பாதுகாக்கலாம்.