கொத்தமல்லியை பொதுவாக உணவுகளை அலங்கரிப்பதற்காகவும், வாசனைக்காகவுமே பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கொத்தமல்லியில் எந்த அளவுக்கு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது தெரியுமா?
உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொத்தமல்லி தன்னகத்தே கொண்டுள்ளதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இதில், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி1, சி என பல வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.
மேலும், இரும்புச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து என உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களின் அஞ்சறை பெட்டியாக கொத்தமல்லி இருக்கிறது என்பது ஆச்சர்யமான உண்மை.
கொத்தமல்லி தற்போது விலை சற்றே அதிகமாகி விட்டது. அதனால், சிலர் அதனை பயன்படுத்த முடியாமல், தவிர்க்கும் சூழலில் தள்ளப்படுகின்றனர். ஆனால், இத்தகைய ஆரோக்கிய சத்துகள் நிறைந்த கொத்தமல்லியை எளிதில், வீட்டுத் தோட்டம் மற்றும் சிறு தொட்டியில் கூட வளர்க்க முடியும்.
கொத்தமல்லியை தினமும் சரியான அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்தும் மருத்துவ காரணியாக கொத்தமல்லி செயல்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாய் நாற்றம் உள்ளவர்கள் கொத்தமல்லியை சாப்பிட்டு வந்தால், அவர்களது வயிற்றில் உள்ள புண் குணமாகி, துர்நாற்றத்திற்கு பதிலாக புத்துணர்ச்சி வீசும்.