அதிக நன்மைகள் தரும் கொய்யா

கொய்யாவின் பயன்கள்

Oct 7, 2017, 19:56 PM IST

கொய்யா மரத்தின் தாயகம் தென்அமெரிக்கா. அது தென் அமெரிக்காவிலிருந்து 1526 ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து பிலிப்பைன்ஸ்க்கு சென்று அங்கிருந்து போர்த்துகீசியரால் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது.

Image result for Guava

தற்போது இந்தியா முழுதும் சுமார் 5 லட்சம் ஏக்கரில் ஆண்டுக்கு 15 லட்சம் டன் கொய்யா பழங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

நம் நாட்டில் விளைவிக்கப்படும் பழ வகைகளில், மொத்த எடையில் 9 சதவிகிதம்
கொய்யப்பழம் தான் விளைகிறது. இவற்றில் பல வகைகள் இருந்தாலும் பழத்தின் உட்புற நிறத்தைக் கொண்டு, சிவப்புக் கொய்யா, வெள்ளைக் கொய்யா என்று இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர்.

ஆனால், உட்புறம் சிவப்பாக இருந்தாலும் வெள்ளையாக இருந்தாலும் அதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களை பொறுத்தவரை இரண்டுமே ஒன்று தான்.

100 கிராம் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள், ஈரப்பதம்-81.7%,
புரதம்-0.9%., கொழுப்பு-0.3%., மணிச்சத்து-0.7%., நார்ச்சத்து-5.2%., மாவுச்சத்து-11.2%., கலோரி அளவு-51., கால்சியம்-10மி.கி., பாஸ்பரஸ்-28மி.கி., இரும்புச்சத்து-0.27மி.கி., வைட்டமின்’சி’-210மி.கி., வைட்டமின் ‘பி காம்ப்ளெக்ஸ்-சிறிதளவு.

கொய்யாப் பழம் சுவை மிக்கதாகவும், சத்து நிரம்பியதாகவும், வாங்குவதற்கு எளிதானதாகவும் இருக்கும் என்பதால் கொய்யாப்பழம் நடுத்தர வர்க்கத்தினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது,

ஆப்பிளைப் போன்று விட்டமின் ‘சி’ நிறைந்ததாகவும், தாதுப்பொருட்கள் செறிந்ததாகவும், விலை மலிவாகவும் இருப்பதால் எளிய மக்களுக்கும் ஏற்ற பழமாக திகழ்கிறது.

மேலும், இது ஆப்பிளைப் போல் காஷ்மீரிலிருந்தோ, இமாச்சல பிரதேஷத்திலிருந்தோ வர வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை. உள்ளூரிலேயே கிடைக்கிறது. கொய்யா பழத்திற்கு சீசன் என்று எதுவும் கிடையாது, ஏறக்குறைய ஆண்டு முழுவதும் கிடைக்கிறது.

கொய்யாப் பழம் மற்றும் அதன்‌ கொட்டையில் புரோட்டீன், கொழுப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் சிறிதளவே கிடைக்கிறது என்பது மட்டுமே குறை. இருந்தாலும் நார்ச்சத்து, கால்ஷியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும் நிறைவான அளவிற்கு தன்னுள் அடக்கியுள்ளது.

100 கிராம் கொய்யாப்பழத்தில் சுமார் 210 மில்லி கிராம் விட்டமின் ‘சி’ இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், நன்கு பழுத்த பழத்தைக் காட்டிலும் முக்கால் பழமாக உள்ள பழத்தின் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.

இயற்கையிலேயே கொய்யாப்பழம் ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. நாள்தோறும் ஒரு நடுத்தர அளவுள்ள கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வர மலச்சிக்கல் குணமாகும்.

கொய்யாப்பழத்தின் தோல் பகுதியிலுள்ள வைட்டமின் ‘சி’ பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்களைப் போக்க வல்லது. பழுக்காத கொய்யாக்காய் வயிற்றுக் கடுப்பையும், வயிற்றோட்டத்தையும் தடுக்கும்.

கொய்யா மரத்தின் பட்டை மற்றும் வேரைக் கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம், சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கைத் தடை செய்யும்.

இலையை மட்டும் கஷாயமாக செய்து அதை வாயிலிட்டுக் கொப்பளித்தால் ஈறு வீக்கம் கட்டுப்படும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மலக்குடல் பிதுக்கத்திற்கு கொய்யா இலையை அரைத்துப் பற்றுப் போட நல்ல பலன் கிடைக்கும்.

இயற்கையின் வரமாக இறைவன் நமக்களித்த கொய்யாமரத்தின் பலன்களை, அனைவரும் உண்டு அனுபவித்து உடல்நலம் பேணலாம்

 

You'r reading அதிக நன்மைகள் தரும் கொய்யா Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை