மோடியின் நண்பரும் இந்திய பெருமுதலாளிகளில் ஒருவருமான அதானிக்கு சொந்தமான நிலக்கரிச் சுரங்கத்திற்கு எதிராக ஆஸ்திரேலிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம்(Carmichael coal mine) அமைக்க அதானி நிறுவனத்திற்கு ஆஸ்திரேலியா அரசு கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில், அதானியின் நிலக்கரி சுரங்கக் கட்டுமானத்துக்கு வடக்கு ஆஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நிலக்கரி சுரங்கத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என்று அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், அதானி நிறுவனம் ஆஸ்திரேலியாவில் துவங்கும் நிலக்கரி சுரங்கத் திட்டத்தால் நிலத்தடி நீர் மாசுபடுவது மட்டுமல்லாமல் கடல்வாழ் பவழப் பாறைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று போராட்டத்தினர் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் அதானி நிறுவனத்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள போண்டி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த சனிக்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலக்கரி வெட்டி எடுக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கோஷங்கள் எழுப்பியும், அதானி நிறுவனத்திற்கு எதிராக பதாகைகள் ஏந்தியும் போராட்டதில் ஈடுபட்டனர்.