காலையில் எந்த மருத்துவ ஆய்வகத்தின் முன்பு பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இரத்த சர்க்கரை பரிசோதனைக்கு வருவோர் அத்தனை அதிகம்! மருந்துக் கடைகளில் நீரிழிவு குறைபாட்டுக்கான மருந்துகளை மாதந்தோறும் மொத்தமாக வாங்குவோர் எண்ணிக்கை கணக்கிடலாகாதது.
'நீரிழிவு' என்னும் குறைபாடே பொது வழக்கில் சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது. இது நோய் அல்ல; குறைபாடுதான் என்றும் சிலர் கூறுகிறார்கள். பொதுவான எந்த உடல் நலக்குறைபாட்டுக்காக மருத்துவ ஆலோசனைக்குச் சென்றாலும்,
"சுகர் இருக்குதா?" ."ஒரு டெஸ்ட் எடுத்துப் பார்த்திடலாம்" என்ற ஆலோசனை தவறாமல் வழங்கப்படுகிறது. பல உடல் நலச் சிக்கல்களுக்கு நீரிழிவே அடிப்படையாக இருப்பதால், இரத்தத்தில் சர்க்கரை அளவை சோதிப்பதே மருத்துவர்களின் முதல் தெரிவாக உள்ளது.
இயல்பான அளவு
இரத்தத்தில் எவ்வளவு சர்க்கரை இருக்கலாம் என்பது அனைவரும் பொதுவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஓர் உண்மை. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சோதிக்க இரண்டு முறைகளில் இரத்த மாதிரி சேகரிக்கப்படுகிறது.
வெறும் வயிற்றில் சோதனை (Fasting test): இரவு உணவுக்குப் பிறகு எதுவும் சாப்பிடாமல் காலையில் இரத்த மாதிரி சேகரிக்கப்படும். இதில் இரத்தத்தில் சர்க்கரை 100 mg/dL என்ற அளவில் இருப்பது இயல்பு நிலையாகும். வெறும் வயிற்றில் இரத்த சர்க்கரை 100 to 125 mg/dL அளவாக இருந்தால் அது நீரிழிவுக்கு முன்னான நிலை என்று கருதப்படும். இதற்கு மேலான அளவில் இரத்தத்தில் சர்க்கரை இருந்தால் அந்நபர் நீரிழிவு குறைபாடு உள்ளவராகக் கருதப்படுவார்.
சாப்பிட்ட பிறகான சோதனை (Postprandial test): பொதுவாகக் காலை உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து இரத்த மாதிரி சேகரிக்கப்படும். இச்சோதனையில் இரத்தத்தில் சர்க்கரை 70-140 mg/dL என்ற அளவில் இருப்பது இயல்பு நிலையாகும்.
அறிகுறிகள்:
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உந்துதல், எப்போதும் தீவிர தாகமாக, அதிக பசியாக உணர்தல், அதிக களைப்பு மற்றும் உடலில் ஏற்படும் காயங்கள், புண்கள் நீண்டகாலமாக ஆறாமல் இருந்ததால் ஆகியவை சர்க்கரை நோயின் பொது அறிகுறிகளாகும்.
வகைகள்
ஆற்றலுக்குத் தேவையான குளூக்கோஸை உடலால் சேர்த்து வைக்க இயலாத நிலையே நீரிழிவு பாதிப்பாகும். நீரிழிவு பாதிப்பில் இரு வகைகள் உள்ளன. இரண்டின் பாதிப்புகளும், அறிகுறிகளும் ஒன்றுபோல் இருந்தாலும் இவை வேறுபட்டவை.
வகை 1:
வகை 1 நீரிழிவு, இளவயது நீரிழிவு என்று அறியப்படுகிறது. பெரும்பாலும் குழந்தை மற்றும் இளமைப் பருவத்திலேயே இதன் பாதிப்பு தெரிய ஆரம்பிக்கும். உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, உடலிலுள்ள ஆரோக்கியமான செல்களை வெளியிலிருந்து வந்த அந்நிய செல்களாக தவறாகக் கருதித் தாக்குகிறது. கணையத்தில் இன்சுலினை உருவாக்கக்கூடிய பீட்டா செல்கள் இருக்கும். அந்த பீட்டா செல்கள் அந்நிய செல்களாக எண்ணி அழிக்கப்படுவதால் கணையத்தில் இன்சுலின் உருவாக இயலாத நிலை ஏற்படும். இதனால் நீரிழிவு குறைபாடு உண்டாகிறது. ஆகவே இக்குறைபாட்டைப் பரம்பரை குறைபாடாகக் கருதுகிறார்கள். பரம்பரை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளே வகை 1 நீரிழிவைக் கொண்டு வருகின்றன. பரம்பரை பாதிப்பாக இருப்பதால் இதைத் தடுக்க இயலாது.
வகை 2:
நீரிழிவின் இரண்டாம் வகை பாதிப்பு பெரும்பாலும் பெரியவர்களுக்கு வருகிறது. மோசமான வாழ்க்கை முறை காரணமாக இப்போது குழந்தைகளுக்குக் கூட வகை 2 நீரிழிவு பாதிப்பு ஏற்படுகிறது. கணையம் போதிய அளவு இன்சுலினை உற்பத்தி செய்தும் உடல் அதை முழுவதுமாக பயன்படுத்த இயலாமையே இரண்டாம் வகை நீரிழிவாகும்.
முதலாம் வகையைக் காட்டிலும் இரண்டாம் வகை பாதிப்பே பரவலாகக் காணப்படுகிறது. உடலால் ஏன் இன்சுலினை முழுவதுமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்பதற்கான உண்மையான காரணம் அறியப்படவில்லையென்றாலும் வாழ்வியல் முறை மற்றும் அதிக உடல் எடை ஆகியவையே காரணமாக இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.