ரகுமான்கான் மரணம்.. ஸ்டாலின் இரங்கல்.. திமுக 3 நாள் துக்கம்..

Dmk ex.minister Raghumankhan died.

by எஸ். எம். கணபதி, Aug 20, 2020, 11:51 AM IST

திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திமுக 3 நாள் துக்கம் அனுசரிக்கிறது. முன்னாள் அமைச்சர் ரகுமான்கானுக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று பாதித்திருந்ததால், அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார்.

தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த ரகுமான்கான், திமுக முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். 1977, 1980 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1989-ல் சென்னை பூங்கா நகர், 1996-ல் ராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட்டு வென்றவர்.
கடந்த 1996-ம் ஆண்டு கருணாநிதி அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். தமிழக அரசின் சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழுவின் துணைத் தலைவராக இருமுறை பதவி வகித்தார். கடைசியாக, திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினராக இருந்து வந்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:
திமுகவின் இடி, மின்னல், மழையில், ஓயாத இடி முழக்கமாகத் திகழ்ந்த சிங்கச் சிப்பாய்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சர் மற்றும் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான ரகுமான்கான் மறைவெய்தி விட்டார் என்ற துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்கும் பெரும் வேதனைக்கும் உள்ளானேன். ஆறுதல் கூறவோ - இரங்கல் தெரிவிக்கவோ ஆற்றலின்றி என் இதயம் அழுகிறது; திறனிழந்து திண்டாடுகிறது; உள்ளம் பதறுகிறது.திமுகவுக்காக அவர் ஆற்றிய அரும் பணிகள் – என் கண் முன்னே நிற்கும் அவரது ஆலோசனைகள் – இவற்றுக்கிடையில், கனத்த இதயத்துடன்- அவரது மறைவிற்குத் திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டக்கல்லூரியில் துரைமுருகன், முரசொலி செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கடபதி போன்ற கொள்கை வீரம் மிக்க தலை மாணாக்கர்களுடன் இணைந்து - தடந்தோள் தட்டி - மாணவர் சமுதாயத்திற்கு மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் களத்தில், கழக மாணவரணியில் பம்பரமாக - பம்பரத்தை விட வேகமாகச் சுற்றிச் சுழன்று பணியாற்றியவர்.1977-ல் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினரான அண்ணன் ரகுமான்கான், 5 முறை சட்டமன்ற உறுப்பினர் - அதில் ஒரு ஐந்து ஆண்டு தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்த் துறை அமைச்சராக, கலைஞர் அமைச்சரவையில் செயல்பட்டு - தமிழக வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்.

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களுடன் ஆன்லைன் ஆலோசனையில் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது இணைப்பு துண்டித்துப் போனது; ஆனாலும் எனது வீடியோ காலில் தனியாக வந்து பேசி, எனக்குக் கட்சி தொடர்பாக சில ஆலோசனைகளை வழங்கி - தம்பிக்கு, பாசம் நிறைந்த “அண்ணனாக” என்னிடம் கடைசியாகச் சொன்ன வார்த்தை - “தம்பி, உங்கள் உடல்நலத்தைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நலமாக இருப்பதுதான் இன்று இந்த நாட்டுக்கு இப்போது தேவை” என்று பிறப்பித்த அன்புக் கட்டளைதான்! பதிலுக்கு நானும் அவரிடம், “அண்ணே! நீங்களும் உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். சிறுபான்மைச் சமுதாயத்திற்கு மட்டுமின்றி - கழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் நீங்கள் மிகவும் முக்கியம்” என்று கூறினேன். அந்த உரையாடலின் உணர்ச்சிப் பெருக்கில் அவர் கண் கலங்கிய காட்சியைக் கண்டேன். ஆனால் அவர் இன்று என்னைக் கண்ணீர் மல்க வைத்து விட்டு - என்னை விட்டு மட்டுமின்றி- இந்த இயக்கத்தின் கோடானுகோடித் தோழர்களிடமிருந்தும் பிரியா விடை பெற்றுச் சென்று விட்டார் என்பதை என் மனம் அறவே ஏற்க மறுக்கிறது.

ஆற்றல் மிக்க - அன்பு மிக்க - இந்த இயக்கத்தின் ஆணிவேர்களில் ஒருவரான அண்ணனை இழந்து பரிதவிக்கிறேன்; இயக்கத் தோழர்களுக்கு ஆறுதல் சொல்ல இயலாமல் தத்தளித்து நிற்கிறேன். அவரது மூச்சு நின்று இருக்கலாம். ஆனால் அவரின் “முரசொலி” கட்டுரைகளும் - “முழங்கிய மேடைப் பேச்சுகளும்” என்றும் நம் கண்களிலே இருக்கும்; காதுகளிலே ஒலித்துக் கொண்டேயிருக்கும். அவரது குடும்பத்திற்கும் - உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், இன்று(ஆக.20) முதல் 3 நாட்களுக்கு திமுக கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறும், நிகழ்ச்சிகளை ஒத்தி வைக்குமாறும் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You'r reading ரகுமான்கான் மரணம்.. ஸ்டாலின் இரங்கல்.. திமுக 3 நாள் துக்கம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை