தலை முடியை பாதுகாக்க நம் பல முயற்சிகளை செய்து வருகிறோம். இருப்பினும், ஊட்டச்சத்து குறைப்பாடு, தூக்கமின்மை, பணிச்சுமை காரணமாக கூந்தல் பராமரிப்பின்றி உயிரின்றி காணப்படுகிறது. குறிப்பாக, முடி உதிர்வு, பொடுகு தொல்லை, உச்சந் தலையில் அரிப்பு போன்ற பிரச்சினைகளால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதில் பெரும்பாலும் பொடுகுத் தொல்லையை போக்க பல ஆயிரங்களை செலவு செய்து வெறுத்துப் போயிருப்பீர்கள். உச்சந்தலை வறண்டு அரிப்பு ஏற்படுவதன் காரணமாகவே பொடுகு ஏற்படுகிறது. அதனால், வீட்டிலேயே சில பொருட்களைக் கொண்டு பொடுகை எளிதில் விரட்டிவிடலாம். குறிப்பாக, பேக்கிங் சோடா பொடுகுக்கு நல்ல நிவாணரம் தரும்.
ஒரு கிண்ணத்தில் கூந்தல் அளவிற்கு ஏற்ப 2 அல்லது 3 தேக்கரண்டி பேக்கிங் சோடாவுடன் வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து உச்சந்தலை முழுவதும் தேய்க்கவும். 3 முதல் 5 நிமிடங்கள் ஊறவிட்டு பின் ஷாம்பு போட்டு அலசவும்.
இதைத்தவிர, பேக்கிங் சோடாவுடன் வேறு சில பொருட்களை சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் பொடுகு எளிதில் போய்விடும்.
ஆப்பிள் சிடர் வினிகருடன் பேக்கிங் சோடா:
2 தேக்கரண்டி பேக்கிங் சோடாவுடன், 2 அல்லது 3 தேக்கரண்டி ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து கலந்து உச்சந்தலையில் தேய்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசவும்.
இதுப்போன்று வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் பொடுகுத் தொல்லை இருக்காது.
எலுமிச்சைப்பழம் மற்றும் பேக்கிங் சோடா:
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி எலுமிச்சைப்பழ சாறு மற்றும் ஒன்றரை தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து கலந்து உச்சந்தலையில் தேய்த்து பின் அலசவும்.
வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் தரும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் பேக்கிங் சோடா:
கிண்ணத்தில் ஒன்றரை தேக்கரண்டி பேக்கிங் சோடா, ஒரு தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து உச்சந்தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு அலசவும்.
இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் பொடுகு சுத்தமாக நீங்கி கூந்தலுக்கு புத்துணர்ச்சி தரும்.