ஓணம் என்பது கேரள மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த ஒரு பண்டிகையாகும். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் மலையாளிகள் இந்த பண்டிகையை கொண்டாட தவறுவதில்லை. தற்போது கொரோனா காலமாக இருந்த போதிலும், வழக்கமான உற்சாகம் இல்லாவிட்டாலும் முடிந்த அளவு ஓணம் பண்டிகையை கொண்டாட மலையாளிகள் தீர்மானித்துள்ளனர். சென்னை உள்பட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மலையாளிகள் உள்ளனர். ஓணம் பண்டிகை தொடங்குவதற்கு முன்பே இவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
ஆனால் இவ்வருடம் கொரோனா பரவலை தொடர்ந்து பலராலும் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ஆனாலும் ஓணம் பண்டிகையை கொண்டாட தங்களது ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்க தீர்மானித்துள்ளது. இதன்படி வரும் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 தேதி வரை திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு சூப்பர் டீலக்ஸ் பஸ்களை இயக்க கேரள அரசு போக்குவரத்து கழகம் தீர்மானித்துள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து செல்லும் பஸ்கள் நாகர்கோவில் வழியாகவும், எர்ணாகுளம் மற்றும் கண்ணூரில் இருந்து செல்லும் பஸ்கள் கோவை வழியாகவும் செல்லும்.
இந்த பஸ்களில் வழக்கமான கட்டணத்தை விட 10 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 1,330 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் கொரோனா நிபந்தனைகளைப் பின்பற்றி இந்த பஸ் சர்வீஸ் நடத்தப்படும் என்று கேரள அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து செல்பபவர்கள் கேரள அரசின் கோவிட் 19 கேரளா என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயண பாஸ் வாங்க வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே பஸ் டிக்கெட் வழங்கப்படும். டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இணையத்தில் இருந்து கிடைத்த பாசையும் இணைக்க வேண்டும். பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், பயணிகள் அனைவரும் தங்களது செல்போனில் 'ஆரோக்கிய சேது' செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என்றும் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து கேரளாவுக்கு பஸ் சர்வீஸ் ...ஓணம் ஸ்பெஷல்..!
Advertisement