மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களில் இதுவரை 65 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன 5 பேரின் உடல்களை தேடும் பணி இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே 2 வயது சிறுமி தனுஷ்காவின் உடல் உட்பட பல உடல்களை மீட்க உதவிய குவி நாயை கேரள போலீசின் துப்பறியும் நாய் பிரிவில் சேர்க்கலாமா என்பது குறித்து போலீசார் ஆலோசித்து வந்தனர். இதுதொடர்பாக கேரள போலீசில் உள்ள துப்பறியும் நாய் பிரிவின் பயிற்சியாளர் அஜித் மாதவன் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருந்தார்.
அதற்கு இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேசன் அனுமதி அளித்தார். கேரள போலீஸ் டிஜிபி லோக்நாத் பெஹ்ராவும் அதற்கு அனுமதி வழங்கினார். இதையடுத்து குவி நாயை கேரள போலீசின் 'கே 19' என்ற துப்பறியும் நாய் பிரிவில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. முதல்கட்டமாக அந்த நாயை தனது பாச வளையத்திற்குள் அஜித் மாதவன் கொண்டுவந்தார். ஒரு நாளிலேயே பயிற்சியாளர் அஜித் மாதவனின் கட்டளைக்கு அந்த நாய் பணிய தொடங்கியது.
இதன் பின்னர் அதற்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த பரிசோதனையில் குவி நாய்க்கு போலீசில் சேர்வதற்கான முழு உடற் திறன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதை கேரள போலீசின் துப்பறியும் நாய் பிரிவில் சேர்க்க தீர்மானிக்கப்பட்டது. நேற்று அந்த நாயை முறைப்படி கேரளா போலீசில் சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு கலந்து கொண்டனர். தொடர்ந்து பயிற்சியாளர் அஜித் மாதவன் குவி நாயை அங்கிருந்து கொண்டு சென்றார். அப்பகுதியினர் ஆனந்த கண்ணீருடன் தங்களது செல்ல நாயை வழியனுப்பி வைத்தனர்.
பல குற்றங்களைக் கண்டுபிடிக்க உதவிய நாய் போலீசில் சேர்ப்பு... ஊர்மக்கள் ஆனந்த கண்ணீர்
Advertisement