உங்களுக்கான டயட் எது? அதை தேர்ந்தெடுப்பது எப்படி?

Diet tips

by SAM ASIR, Aug 23, 2020, 11:02 AM IST

'டயட்' என்னும் உணவு ஒழுங்கு, உடல் எடையைக் குறைப்பது அல்லது கூட்டுவது என்பதை குறித்தது மட்டுமேயன்று. உணவு ஒழுங்கு என்பது தினமும் நாம் எவற்றைச் சாப்பிடுகிறோம்; எவற்றை அருந்துகிறோம் என்பதைக் குறிப்பதாகும். சாப்பாடு குறித்த உணர்வு மற்றும் உடல் தேவைகளைப் பொறுத்ததே 'டயட்' என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

'டயட்' எதைப் பொறுத்தது?
உங்களைக் குறித்து நீங்களே அறிந்து கொள்வதைக் குறித்ததே டயட் ஆகும். உங்கள் உடலின் தன்மை, அதற்குத் தேவைப்படும் ஊட்டச்சத்து உணவுப் பொருள்களைக் குறித்துத் தெளிவாக அறிவதே உணவு ஒழுங்கில் முக்கியமானது. நல்ல உணவு என்று பொதுவாகக் குறிப்பிடப்படுவதையும் தாண்டி ஒவ்வொரு நிலைக்கான ஊட்டச்சத்தையும் பொறுத்து அமைவதே ஊட்டச்சத்து உணவு என்று அழைக்கப்படுகிறது.

உங்களைப் புரிந்து கொள்ளுதல்

உங்களைக் குறித்து நீங்கள் அறிந்து கொள்வதே உங்கள் உணவு ஒழுங்குமுறையை அமைத்துக் கொள்வதற்கான முதல் கட்டமாகும். முன் முடிவு ஏதுமில்லாமல் நிலைக்கண்ணாடி முன்பு நின்று உங்கள் உடலமைப்பைப் பாருங்கள். 'நான் இப்படித்தான்'; 'நான் பார்க்கத்தான் அப்படி' என்ற தீர்மானமான முடிவுகளை விட்டுவிட்டுத் திறந்த மனதுடன் பாருங்கள். ஒவ்வொருவருடைய உடலும் வேறுபட்டது; வெவ்வேறு விதமாகச் செயல்படக்கூடியது. உடல் எடையைக் குறைப்பது அல்லது கூட்டுவது குறித்து ஒருவர் எடுக்கும் முடிவு மற்றவருக்குப் பொருந்தாமல் போகக்கூடும். ஆகவே, உடல் உடலின் தன்மையை அறிந்து கொள்வதோடு, அதற்கு எது ஏற்றது என்பதைத் தெரிந்து கொள்வதும் முக்கியம்.

உடல் நலப் பின்புலத்தை அறிதல்

உங்கள் உடல் நலப் பின்புல குறிப்புகள், உங்களுக்கான உணவு ஒழுங்குமுறையை அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்களுடைய தனிப்பட்ட குறிப்புகளோடு உங்கள் குடும்பத்தினரின் உடல் நலத்தைப் பற்றிய குறிப்புகளும் அதற்கு அவசியம். முன்பு உங்களுக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைபாடுகளோடு, உங்கள் இரத்த சொந்தங்களுக்கு அவர்கள் வாழ்நாள் காலத்தில் என்னென்ன உடல்நல குறைபாடுகள் இருந்தன என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும். அவற்றைத் தெரிந்து கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் உங்களுக்கு வரக்கூடிய குறைபாடுகளைக் கணித்து, அவற்றைத் தவிர்ப்பதற்கான உணவு ஒழுங்கை கடைப்பிடிக்க முடியும்.

உணவுப் பொருள்களை அடையாளம் காணுதல்

டயட் கடைப்பிடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு, தேவைப்படும் உணவுப் பொருள்களை எவை என்று தேர்ந்தெடுக்கவேண்டும். எங்கோ தொலைவில் போய் வாங்கக்கூடியவை; அரிதாகக் கிடைப்பவை; விலையுயர்ந்தவற்றைத் தவிர்த்துவிட்டு, வீட்டில் இருப்பவை; அருகில் எப்போதும் கிடைக்கக்கூடியவற்றைக் கொண்டே உணவு ஒழுங்கு பட்டியலைத் தயாரிக்கவேண்டும். அவற்றுக்கு நாம் செய்யக்கூடிய செலவையும் கண்டிப்பாகக் கருத்தில் கொள்ளவேண்டும். குறைந்த செலவில் நேரத்தையும் வீணாக்கவேண்டிய அவசியமில்லாத உணவுப் பொருள்களைத் தெரிவு செய்ய வேண்டும்.

ஊட்டச்சத்துகளை அறிதல்

ஆரோக்கியமான உணவு ஒழுங்கு என்பது, உடல் முறையாகச் செயல்படத் தேவையான ஆற்றலைத் தருவதாகும். உங்கள் உடலுக்கு எவ்வளவு கலோரி ஆற்றல் தேவைப்படுகிறது என்பதை முதலில் சரியாகக் கணிக்கவேண்டும். உடல் எடையைக் கூட்ட வேண்டுமா, குறைக்கவேண்டுமா போன்ற குறிப்பிட்ட தேவைகளோடு, வயது, ஆண் மற்றும் பெண் என்ற பாலினம், உடல் உழைப்பின் அளவு இவற்றைப் பொறுத்தே உணவு ஒழுங்கை தீர்மானிக்க வேண்டும். பெரு ஊட்டச்சத்துகள் என்னும் புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேடு இவை உடலுக்கான ஆற்றலை அளிப்பவை. இவற்றோடு வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் என்னும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உணவைத் திட்டமிடுதல்

சமையல் முறையைத் தெரிவு செய்தல், தேவையான பொருள்களை வாங்குதல் மற்றும் உணவு சமைத்தல் ஆகியவை அடுத்த கட்டமாகும். இவற்றைக் குறைந்தது ஒரு வாரக் காலத்திற்குத் திட்டமிடலாம். அந்த வாரத்தில் சமைக்க வேண்டிய உணவு, தேவையான மூலப் பொருள்கள், சமைக்கத் தேவைப்படும் நேரம், அவற்றில் அடங்கியிருக்கக்கூடிய பெரு ஊட்டச்சத்துகள் ஆகியவற்றைத் தெளிவாகத் திட்டமிட்டால் ஒரு வாரக் காலத்திற்கான உணவு ஒழுங்கு தயாராகி விடும்; ஆரோக்கியமான உணவு சாப்பிட முடியும்.

You'r reading உங்களுக்கான டயட் எது? அதை தேர்ந்தெடுப்பது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை