பசி அறிந்து உண்.. உணவே மருந்து போன்ற பொன் மொழிகளுக்குப் பின்னால் இருக்கும் காரணங்களை அறிந்தால் நோய்களை எப்போதோ விரட்டி அடித்திருப்போம்.
காலம் மாற்றம், சூழ்நிலை மாற்றம் என்று நம் வாழ்க்கை முறையே மாறிவிட்டது. ஆரோக்கியமான உணவில் இருந்து பாஸ்ட் புட், ஜங்க் புட், ஆன்லைன் புட்களுக்கு தாவிக் கொண்டிருக்கிறோம். ருசிக்காக சாப்பிடுவதைவிட பசிக்காக சாப்பிட வேண்டும். அதுவும் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். மூன்று வேளை சாப்பிடுவதை 5 அல்லது 6 வேளையாகவும் பிரித்து சாப்பிடலாம்.
ஆனால் ஒரு சிலருக்கு ஏதாவது ஒன்று சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் ஓர் உணர்வுத் தோன்றும். அப்போது தான் காலை உணவு முடித்திருப்பார்கள். அரை மணி நேரம் கூட ஆகியிருக்காது. கால்கள் ப்ரிட்ஜ்ஜை நோக்கி ஓடும். கைகள் கொரிப்பதற்கு தேடும். வாயில் எச்சில் ஊற சாப்பிடுவார்கள். சாப்பிட்டு முடித்து சில நிமிடங்களில் மீண்டும் ஏதாவது சாப்பிடத் தோன்றும். கொஞ்சமாக ஆரம்பித்து அது ஒரு வழக்கமாகவே மாறியிருக்கும்.
நமக்கு சோறு தான் முக்கியம் என்று ஒரு கட்டு கட்டுவார்கள். இதன் எதிரொலி என்னவாக இருக்கும் ? கண்டிப்பாக உடல் எடை கிடுகிடுவென உயரும். வரக்கூடாத வியாதிகள் எல்லாம் வரும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகள் அதிகரிக்கும்.
சரி இதற்கு என்ன தான் தீர்வு..? நாம் மனது வைத்தால் பசியை கட்டுப்படுத்த முடியும். உடனடியாக நிறுத்த முடியாது என்றாலும், தொடர் பசி பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடலாம்.
அது எப்படி?
முதலில் உங்கள் உடல் பற்றி நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள். நம் உடலுக்கு என்ன தேவை ? என்ன தேவையில்லை? என்பதை உணர்ந்தால் பாதி பிரச்சினை தீர்ந்துவிடும். உங்களுக்கு மிகவும் பிடித்த ஓர் உணவை நீங்கள் சாப்பிட முற்படும்போது உள்மனது வேண்டாம் சாப்பிடாதே என்று சொல்லும். ஆனால் நாம் என்ன செய்வோம் ? ருசிக்காக சாப்பிட்டுவிடுவோம். பின்னால் அவதிப்படுவது யார் ? நம் உடலோடு சேர்ந்து நாமும் தான். அதனால், எப்போதும் உடல் அல்லது உடல் நலத்துடன் நாம் தொடர்பில் இருக்க வேண்டும்.
பசி எடுக்கும்போது துரித உணவுகள் மீது ஆசைப் போகக்கூடாது. அதற்கு பதில், ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். காய் சாலெட், பழ சாலெட், பழச்சாறுகள் போன்று எடுத்துக் கொள்ளலாம். தாகத்திற்கும், பசிக்கும் கூட வேறுபாடு தெரியாமல் இருக்கலாம். அதனால், பசிக்கும்போது தண்ணீர் குடியுங்கள். அப்போதைக்கு பசியும் அடங்கும், தாகமும் தணியும்.
அவ்வப்போது பால் தொடர்பான பானங்கள் குடிப்பதற்கு பதில், க்ரீன் டீ, ப்ளாக் காபி போன்றவை பருகலாம்.
பசியை நாம் கட்டுப்படுத்தினால் நம் உடல் எடையும் குறையும். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதயக் கோளாறு மற்றும் வளர்சிதை மாற்றம் போன்ற நோய்களை நெருங்கவிடாமலும் பார்த்துக் கொள்ளலாம். உடலும், மனமும் லேசானதை உணர்வீர்கள்.