ஸ்லிம் ஆகணுமா? பேரிக்காய் சாப்பிடுங்க!

by SAM ASIR, Sep 6, 2020, 11:10 AM IST

பழங்களில் பொதுவாகவே நார்ச்சத்து, தாது உப்புகள், வைட்டமின்கள் அதிகம் நிறைந்திருக்கும். ஆகவே, பொதுவாக பழங்கள் உடல் எடையை குறைப்பதற்கான உணவு பட்டியலில் இடம் பிடிக்கும். பல்வேறு பழங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பானவை. சில பழங்கள் குறிப்பிட்ட பருவகாலத்தில் மட்டுமே கிடைக்கும். சில பழவகைகள் எப்பொழுதும் கிடைக்கும். கோடைக்காலத்தில் மாம்பழமும் தர்பூசணியும் வரும். குளிர்காலத்தில் ஆரஞ்சு கிடைக்கும். பருவமழைக்காலத்தில் பேரிக்காய் கிடைக்கும்.
பேரிக்காயிலுள்ள சத்துகள்
ஒரு சாதாரண அளவுள்ள பேரிக்காயில் 101 கலோரி, 1 கிராம் புரதம், 27 கிராம் கார்போஹைடிரேடு, 6 கிராம் நார்ச்சத்து, தினசரி தேவைப்படும் அளவில் 12% வைட்டமின் சி, 6 % வைட்டமின் கே, 4% பொட்டாசியம், 16% செம்பு ஆகிய சத்துகள் காணப்படுகின்றன.


ஸ்லிம் ஆகலாம்
பேரிக்காயில் மிகக்குறைந்த கலோரியே உள்ளது. அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளது. பேரிக்காயை சாப்பிட்டால் நெடுநேரத்திற்கு வயிறு திருப்தியாக இருக்கும். ஆகவே, ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை மனம் நாடாது. தினமும் 2 பேரிக்காய்களை தொடர்ந்து 12 வாரங்களுக்கு சாப்பிட கொடுத்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அப்படி சாப்பிட்டவர்களின் இடுப்பளவு 1.1 அங்குலம் குறைந்தது. ஆம், உடல் எடையை குறைக்க விரும்பினால் பேரிக்காயை தொடர்ந்து சாப்பிடுங்கள்.
வலியில்லா வயிறு
பேரிக்காய், செரிமானத்தை ஊக்கப்படுத்துகிறது. ஆகவே, வயிற்றுப் பிரச்னை எழுவதில்லை. பேரிக்காயில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துகள் உள்ளன. ஆகவே, உணவு நன்றாக செரிக்கிறது; மலம் எளிதாக கழிகிறது. பேரிக்காய் சாப்பிடுகிறவர்களின் உடல் உள்ளுறுப்புகள் நன்றாக செயல்படும். ஆகவே, உடல் எடை குறையும்.
ஆரோக்கியமான இதயம்
பேரிக்காயில் ஃப்ளவனாய்டு என்ற ஆன்ட்டிஆக்ஸிடெண்ட் உள்ளது. அது அழற்சியை தடுப்பதோடு இதயநோய்கள் வராமலும் பாதுகாக்கிறது. செம்பு மற்றும் சி, கே ஆகிய வைட்டமின்கள் அழற்சியை குறைக்கின்றன.
புற்றுநோய்க்கு தடை
பேரிக்காயில் ஆந்தோசையனின் மற்றும் சின்னமிக் அமிலம் ஆகியவை உள்ளன. இவை புற்றுநோய் செல்கள் வளர்வதை எதிர்த்துப் போராடும்.
சீரான இரத்த ஓட்டம்
வாரத்திற்கு இரண்டு பேரிக்காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். இரத்தத்தில் அதிக ஆக்ஸிஜன் கிடைக்கும்.
பற்கள்
பேரிக்காய் பற்களுக்கு உறுதியை தரும். ஈறுகள் பலம் பெறும். பல்லில் சொத்தை ஏற்படாமல் தடுக்கிறது.
ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய்க்கு 'கோடைக்கால தண்ணீர்குடம்' என்றும் ஒரு பெயர் கூறப்படுகிறது.


More Health News