சர்வதேச நீரிழிவு அமைப்பின் கணக்குப்படி உலகம் முழுவதும் 42.5 கோடி பேர் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயினால் அவதிப்படுகிறார்கள். 2045ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 62.9 கோடியாக இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் பல்வேறு உடல்நலக் கோளாறுகளை கொண்டு வரக்கூடிய தீவிர குறைபாடாகும். வாழ்வியலில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமும் ஒழுங்காக மருந்துகளை சாப்பிடுவதன் மூலம் இக்குறைபாட்டினை கட்டுக்குள் வைக்கலாம்.
போதுமான அளவு இன்சுலின் சுரக்காத நிலை அல்லது உடல் இன்சுலினை பயன்படுத்தாத நிலை என்பது இரண்டாம் வகை நீரிழிவு என்று குறிப்பிடப்படுகிறது. இவ்வகை பாதிப்புள்ளோர் சிலர் வாழ்வியல் மாற்றங்களால் சர்க்கரை இயல்பு நிலையை அடைந்தது என்றும் கூறுகின்றனர். நீரிழிவு உடலின் பல பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். சருமத்திலும் அதன் தாக்கம் தெரியும். நீரிழிவின் தாக்கம் சருமத்தில் தெரிந்தால் உங்கள் உடலில் சர்க்கரை நோய் இருப்பதை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றோ, தற்போது எடுக்கும் சிகிக்சை முறையில் மாற்றம் தேவை என்றோ புரிந்துகொள்ளலாம்.
மஞ்சள், சிவப்பு மற்றும் பழுப்பு நிற தேமல்
நெக்ரோபயாஸிஸ் லிபோய்டிகா என்று கூறப்படும் இந்நிலையில் தோல் பரு போன்ற திட புடைப்பாக காணப்படும். நாளடைவில் இந்த புடைப்புகள் கடினமான, வீக்கம் போன்ற தேமல்கள் பேன்ற தோற்றத்திற்கு மாறும். இவை சிவப்பு, மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படலாம். இந்த புடைப்புகளை சுற்றியுள்ள சருமம் பளபளப்பாக காணப்படும். இரத்த நாளங்கள் பார்வைக்கு தட்டுப்படக்கூடியவையாக அரிப்பும் வலியும் தரும் நிலையில் இருக்கும். சருமத்தில் இதுபோன்ற தேமல்கள் இருந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதிக்கவேண்டும்.
வெல்வெட் போன்ற தேமல்
அடர்நிறத்தில் தேமல் அல்லது பட்டை போன்று தோலில் காணப்படும் நிலை அகாந்தோசிஸ் நைகிரிகேன்ஸ் எனப்படுகிறது. கழுத்து, அக்குள் மற்றும் இடுப்புப் பகுதியில் வெல்வெட் போன்று சரும தேமல்கள் தோன்றினால் இரத்தத்தில் அதிக அளவு இன்சுலின் இருப்பதற்கான அடையாளம். உடலில் நீரிழிவு பாதிப்பு ஏற்படும் முன்பதாக இதுபோன்ற அறிகுறிகள் தோன்றும்.
கொப்புளங்கள்
நீரிழிவு உள்ளோர் சிலருக்கு கை, பாதம், கால் மற்றும் முன் கை ஆகிய பகுதிகளில் கொப்புளங்கள் வரக்கூடும். அளவில் பெரிதாக அல்லது கொத்தாக இவை காணப்படக்கூடும். தீக்காயத்திற்கு பிறகு வரக்கூடிய கொப்புளங்கள் போல இவை தோற்றமளிக்கும். ஆனால் வலி இருக்காது.
ஆறாத காயம்
இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை நீண்டநாள்கள் இருந்தால் உடலின் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் குறையும்; நரம்பும் பாதிப்படையும். இதன் காரணமாக உடலில் காயம் உண்டானால் அது ஆற நெடுங்காலம் ஆகும். குறிப்பாக பாதத்தில் புண் ஏற்பட்டால் ஆறாது. இவை நீரிழிவு அழற்சி (diabetic ulcers) எனப்படுகிறது. நீரிழிவு இருக்கும் என்ற ஐயம் இருந்தால் காயங்கள், புண்கள் ஆகியவற்றை கவனமாக பார்க்கவேண்டும்.
வறண்ட சருமம்
நீரிழிவு பாதிப்புள்ளோர் பெரும்பாலானோருக்கு சருமம் வறண்டு காணப்படும்; அரிப்பும் இருக்கும். இரத்த ஓட்டத்தில் ஏற்படும் குறைவு இப்பாதிப்புகளுக்கு காரணமாகிறது. உங்கள் தோல் மிகவும் வறண்டுபோய் இருந்தால் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
இமைகளில் தேமல்
கண் இமைகள் மட்டும் கண்களை சுற்றி செதிள்கள் போன்ற மஞ்சள் நிற தேமல்கள் காணப்படும். இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாவதால் இவை உருவாகின்றன. கண்களை சுற்றி செதிள் போன்ற மஞ்சள் தேமல்கள் இருந்தால் கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு இருப்பதாக அர்த்தம். இவை போன்ற அறிகுறிகள் இருந்தால் கவனித்து உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நிலைமை மோசமாகாமல் தடுக்க உதவும்.