வாழைக்காய் சிப்ஸை நிச்சயமாக அனைவரும் விரும்புவர். அவ்வளவு ருசி நிறைந்தது. வாழைக்காயை சீவி அதை தேங்காயெண்ணெயில் நன்றாக பொரித்து சிப்ஸ் செய்யப்படுகிறது. சிலர் கடுகு எண்ணெயும் பயன்படுத்துவர். பொரிக்கும்போது சுவைக்காக உப்பு, வற்றல் தூள் (சிவப்பு மிளகாய் பொடி) இவற்றையும் சேர்ப்பர். சிலர் சர்க்கரையும் சேர்ப்பதுண்டு.
வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் வாழைக்காய் சிப்ஸ் தயாரித்தால் நல்லது. சுவையான இந்த பண்டம், இரத்த அழுத்தத்தை பராமரிக்க தேவையான பொட்டாசியம் என்னும் தாதுவை நமக்கு அளிக்கிறது. வாழைக்காயில் இருக்கும் அதிக அளவான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக காத்து, மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது.
வாழைக்காய் சிப்ஸும் உடல் எடையும்
ஆரோக்கியமான தின்பண்டம் உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும். முதன்மையான சாப்பாட்டு வேளைகளுக்கு இடையே தின்பண்டங்களை சாப்பிடுவது பசி, உடலில் சேரும் எரிசக்தி (கலோரி), உடல் எடை இவற்றை பாதிக்கிறது. அதிக அளவு புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கார்போஹைடிரேட் இவை நிறைந்த நொறுக்குத் தீனிகள் நாள் முழுவதும் நல்ல ஆற்றலை நமக்குத் தரும்; பசியை குறைக்கும்.
வறுத்த கொண்டை கடலை, வறுத்த முந்திரி போன்ற கொட்டை வகைகள், அரிசி பொரி, அவல் போன்றவற்றை வீட்டிலேயே செய்து நீண்டகாலம் வைத்து சாப்பிடலாம். அவை ஆரோக்கியமானவை.
ஏர் ஃப்ரையர்
வாழைக்காய் சிப்ஸை பொறுத்தமட்டில் அவற்றை எப்படி தயாரிக்கிறோம் என்பதே முக்கியம். அவற்றை நன்றாக பொரித்தால், வாழைக்காய் மற்றும் தேங்காயெண்ணெயில் இருக்கும் ஊட்டச்சத்துகளை காட்டிலும் அதிகமான எரிசக்தியை (கலோரி) கொண்டதாக மாறிவிடுகிறது. குறைந்த எண்ணெயை பயன்படுத்தி ஏர் ஃப்ரையரில் சிப்ஸை செய்தால் அதை சாப்பிடலாம்.
வாழைக்காய் சிப்ஸ் செய்யும்போது சில மூலிகைகள் மற்றும் மசாலா சேர்த்தால் சுவை மட்டுமல்ல; ஊட்டச்சத்தின் அளவும் கூடும். கடைகளில் வாங்கும் வாழைக்காய் சிப்ஸ் தரமற்ற எண்ணெயில் செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதால் ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே தயாரித்து உண்ணலாம்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் இருப்பதைக் காட்டிலும் வாழைக்காய் சிப்ஸில் குறைவான அளவு பொட்டாசியமே இருக்கும்; அதிக அளவு பூரித கொழுப்பு (சாச்சுரேட்டட் கொழுப்பு) இருக்கும். ஆகவே, வாழைக்காய் சிப்ஸை காட்டிலும் வாழைப்பழம் ஏற்றதாகும்.