குளிர் வந்திடுச்சு... கூந்தலையும் சருமத்தையும் பாதுகாக்க எவற்றை சாப்பிடலாம்?

by SAM ASIR, Nov 10, 2020, 19:07 PM IST

குளிர்காலத்தில் நம் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. அநேக விஷயங்களில் நாம் எச்சரிக்கையாக இருக்கிறோம். குளிர்காலத்தில் சில உணவுப் பொருள்களைத் தவிர்க்கிறோம்; சில பிரத்யேக ஆடைகளை அணிந்துகொள்கிறோம். குளிர், நம்முடைய சருமத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

குளிர்காலத்தில் நம் தோல் மற்றும் முடி ஆகியவற்றைப் பாதுகாக்க சில முயற்சிகளை நாம் செய்யவேண்டியுள்ளது. பெரும்பாலானோருக்குக் குளிர்காலத்தில் சருமம் வறண்டு, அரிப்பு எடுக்கும். குளிர்காலத்தில் சருமம் பாதிப்படைவதைத் தவிர்ப்பதற்கு வைட்டமின் இ எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதில் சில செயற்கை மற்றும் வேதிப்பொருள்களும் கலந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேற்பூச்சு தவிர, வைட்டமின் இ சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதாலும் சருமம் மற்றும் முடியை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.

வைட்டமின் இ சத்துக்கு நிலையற்ற அணுக்களான ஃப்ரீ ராடிகல்ஸை எதிர்த்துப் போரிடும் இயல்பு கொண்டது. ஃப்ரீ ராடிகல்ஸ் உடலின் செல்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. சருமத்திற்கு வயதான தோற்றம், வறட்சி, கரும்புள்ளிகள் இவை தோன்றுவதற்கு ஃப்ரீ ராடிகல்ஸ் காரணமாகின்றன. வைட்டமின் இ, அந்த ஃப்ரீ ராடிகல்ஸின் செயல்பாட்டுக்குச் சருமத்தைப் பாதுகாக்கிறது.

அல்மாண்ட் (பாதாம்)

5 அல்மாண்ட் பருப்புகளை இரவு நீரில் ஊற வைத்து காலையில் அவற்றைத் தோல் உறித்து சாப்பிட வேண்டும். காலை டீ அருந்தும்போது அல்லது காலை உணவுடன் இவற்றைச் சாப்பிட்டால் உடலுக்கு வைட்டமின் இ சத்து கிடைக்கும். குளிர்கால தொல்லைகளிலிருந்து சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பசலைக் கீரை

பசலைக் கீரையைப் பயன்படுத்தி காலையில் சாப்பிடக்கூடிய பல உணவுகளைச் சமைக்கலாம். பசலை கீரையை நறுக்கி அல்லது அவித்து முட்டையுடன் சேர்த்து ஆம்லெட் செய்து சாப்பிடலாம். பசலைக் கீரை மற்றும் பனீரை சாண்ட்விச்சின் உள்ளே வைத்துச் சாப்பிடலாம். ஏதாவது ஒரு வகையில் இக்கீரையைக் காலை உணவில் சேர்த்துச் சாப்பிடுவது பலன் தரும்.

அவகாடோ

அவகாடோ பழத்தை மசித்து முட்டை, இறைச்சி அல்லது வேறு காய்கறிகளுடன் சேர்த்துச் சாப்பிடலாம். அவகாடோ பழத்தைக் காலை உணவுடன் சேர்க்கும்போது உணவும் அழகு பெறும். வைட்டமின் இ சத்து உடலில் சேர்ந்து சருமத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும்.

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதைகளில் அதிக அளவு வைட்டமின் இ சத்து உள்ளது. சூரியகாந்தி விதையை வறுத்து தின்பண்டமாகச் சாப்பிடலாம். காலையில் தேநீர் அருந்தும்போது சாப்பிடலாம் அல்லது காலை உணவாக ஓட்மீல்ஸ் போன்றவை சாப்பிடும்போது அதனுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

வேர்க்கடலை

பீநட் பட்டரை ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம். வேர்க்கடலையை காலை உணவுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது பீநட் பட்டரை பானங்களுடன் சேர்த்து அருந்தலாம்.

வைட்டமின் இ சத்து உடம்பில் சேர்ந்தால் குளிர்காலத்தில் கூந்தல் மற்றும் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

More Health News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை