திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்டின் போது படகு கவிழ்ந்ததில் ஆற்றில் மூழ்கி புதுமண தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். 5 வருடமாக உயிருக்குயிராக காதலித்து வந்த இவர்களது திருமணம் வரும் 22ம்தேதி நிச்சயிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள கியாதமாரணஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்துரு (28). சிவில் காண்ட்ராக்டரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த சசிகலா (22) என்ற பெண்ணை கடந்த 5 வருடங்களாக உயிருக்குயிராக காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு முதலில் இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பின்னர் திருமணத்திற்கு அவர்கள் ஒப்புக் கொண்டனர். வரும் 22ம் தேதி மைசூருவில் வைத்து இவர்களது திருமணத்தை நடத்த தீர்மானித்திருந்தனர். கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை திருமண நாளில் தான் போட்டோவோ, வீடியோவோ எடுக்கப்படும்.
ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. திருமணத்திற்கு முன்பே ப்ரீ வெட்டிங் ஷூட் என்ற பெயரில் மணமக்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று போட்டோ எடுக்கும் பழக்கம் இருக்கிறது. இதேபோல சந்துருவும் சசிகலாவும் திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட் நடத்த தீர்மானித்தனர். இதற்காக மைசூரு அருகே முதுகுத்தூரில் மல்லிகார்ஜுன சுவாமி கோவிலுக்கு சென்றனர். அங்கு வைத்து இவர்களது போட்டோ மற்றும் வீடியோ எடுக்கப்பட்டது. இதன் பின்னர் கட்டேபுரா என்ற இடத்தில் உள்ள ஒரு சுற்றுலா விடுதிக்கு செல்ல தீர்மானித்தனர். அது இயற்கை எழில் சூழ்ந்த இடமாகும். அங்குள்ள காவிரி ஆற்றைக் கடந்து தான் கட்டேபுராவுக்கு செல்ல முடியும். இதன்படி அவர்கள் 2 படகுகளில் புறப்பட்டனர். ஒரு படகில் சந்துரு, சசிகலா மற்றும் அவரது உறவினரும், இன்னொரு படகில் போட்டோ மட்டும் வீடியோகிராபர்களும் சென்றனர்.
படகில் சென்று கொண்டிருந்தபோது புகைப்படம் எடுப்பதற்காக சசிகலா எழுந்து நின்றார். அப்போது அவர் கால் தடுமாறி படகிலிருந்து தவறி ஆற்றில் விழுந்தார். இதில் அதிர்ச்சியடைந்த சந்துரு அவரை காப்பாற்ற முயன்ற போது படகு கவிழ்ந்தது. இதில் படகிலிருந்த அனைவரும் ஆற்றில் விழுந்தனர். படகோட்டி மட்டும் நீந்திக் கரை சேர்ந்தார். இதைப் பார்த்த கரையிலிருந்த சிலர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் சந்துருவின் உறவினரை மட்டுமே மீட்க முடிந்தது. சந்துருவும், சசிகலாவும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திருமணத்திற்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில் இருவரும் பலியானது அவர்களது உறவினர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தலக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.