சர்க்கரை நோயுள்ளோர் வாழைப்பழம் சாப்பிடலாம்... ஏன் தெரியுமா?

by SAM ASIR, Nov 24, 2020, 09:23 AM IST

வாழைப்பழம் எளிதாகக் கிடைக்கக்கூடியது. கடைகளுக்குச் சென்றுதான் வாங்கவேண்டும் என்றில்லாமல் சாலை ஓரங்களிலேயே கிடைக்கும். மற்ற பழங்களைப் போல விலையும் அதிகமாக இருக்காது. வாழைப்பழத்தில் அதிக அளவு கார்போஹைடிரேடு இருப்பதால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு உள்ளது என்ற பயத்தால் பலர் அதைத் தவிர்த்துவிடுகிறார்கள். உண்மையாக வாழைப்பழத்தில் என்னென்ன சத்துகள் உள்ளன தெரியுமா?

வாழைப்பழத்தில் உள்ள சத்துகள்

சராசரியான அளவில் உள்ள வாழைப்பழம் அளிக்கக்கூடிய எரிசக்தி (கலோரி) 110 ஆகும். புரதம் 1 கிராம், கார்போஹைடிரேடு 28 கிராம், சர்க்கரை 15 கிராம் (இயற்கையானது), நார்ச்சத்து 3 கிராம், பொட்டாசியம் 450 மில்லி கிராம், மெக்னீசியம் 32 மில்லி கிராம், வைட்டமின் சி 10.3 மில்லி கிராம், வைட்டமின் பி 6 0.4 மில்லி கிராம் என்ற அளவில் சத்துகள் ஒரு வாழைப்பழத்தில் இருக்கும். அதில் இருக்கும் பொட்டாசியத்தின் அளவு ஒருநாளைக்கு நமக்குத் தேவையானதில் 9 சதவீதத்தையும் மெக்னீசியத்தில் 8 சதவீதத்தையும், வைட்டமின் சி சத்தில் 11 சதவீதத்தையும் கொடுக்கிறது.

கொலஸ்ட்ரால்

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் நார்ச்சத்து ஆகியவை கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கக்கூடியவை. உற்சாகமான மனநிலையை அளிக்கக்கூடியவை.

உடல் எடை

வாழைப்பழத்தில் கார்போஹைடிரேடு இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என்று நம்பி பலர் அதைத் தவிர்க்கின்றனர். உண்மையில் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிறு நிறைந்திருப்பதாக உணர்வோம். ஆகவே, நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடத் தேவையிருக்காது. சற்று காயாக இருக்கக்கூடிய வாழைப்பழத்தில் பெக்டின் என்ற பொருள் உள்ளது. இது செரிமானம் மெதுவாக நடக்கக் காரணமாகிறது. பழுத்த வாழைப்பழத்தில் பெக்டின் இருக்காது. ஆனால், அது செரோடோனின் சுரப்பை அதிகப்படுத்தும். செரோடோனின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி, உடலுக்கு ஆற்றலைத் தரும். வாழைப்பழத்தை அப்படியே சாப்பிட்டாலும், காயைச் சமைத்து அல்லது உலரவைத்து பொடியாக்கி எப்படிச் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்த திருப்தியை அளிக்கும்.

செரிமானம்

வயிற்றுப்போக்குக்கு வீட்டு வைத்தியம் வாழைக்காய் தான். வாழைப்பழத்தில் உள்ள கரையாத இயல்பு கொண்ட நார்ச்சத்து, அவை ஊட்டச்சத்துகளை உறிஞ்சி செரிமான செயல்பாட்டில் உதவுகிறது. கரையக்கூடிய நார்ச்சத்து, செரிமான மண்டலத்திலுள்ள நச்சுப்பொருள்களை அகற்றுகிறது.

இதய ஆரோக்கியம்

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு பொட்டாசியம் தேவை. சோடியம் அதிகமானால் இரத்த அழுத்தம் உயர்ந்து, மாரடைப்பு அல்லது பக்கவாதம் வரும் அபாயம் உள்ளது. வாழைப்பழத்திலுள்ள பொட்டாசியம், உடலிலுள்ள சோடியத்தின் அளவினை சமச்சீராக்கி இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. 2017ம் ஆண்டு வெளியான ஓர் ஆய்வு முடிவில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுப்பொருள்களைச் சாப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இரத்த சர்க்கரை

நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் வாழைப்பழத்தை அப்படியே தவிர்த்துவிடுகிறார்கள். வாழைப்பழத்திலுள்ள பெக்டின் மற்றும் ஸ்டார்ச் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கின்றன. நீரிழிவு உள்ளோர் கொழுப்பு மற்றும் புரத பொருள்களுடன் அதாவது முட்டை, யோகர்ட் மற்றும் பீநட் பட்டர் ஆகியவற்றுடன் சேர்த்து வாழைப்பழத்தைச் சாப்பிடலாம்.

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்