கூட்டுப் பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: போராட்டம் என்பது நமக்கு லட்டு தின்பதைப் போன்றது. 1987&ஆம் ஆண்டில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி ஒரு வாரத்திற்கு தொடர் சாலைமறியல் என்ற மிகக் கடுமையான போராட்டத்தை நடத்தினோம். இப்போது அதைவிட மிகக்கடுமையான போராட்டங்களை நடத்த தயாராக இருக்கிறோம் என்று இந்தக் கால இளைஞர்கள் எனக்கு சவால்விடும் வகையில் கூறுகின்றனர். இடஒதுக்கீட்டுப் போராட்டத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து முடிவெடுப்பதற்காகத்தான் இங்கு கூடியுள்ளோம். வன்னியர்கள் தமிழ்நாட்டில் உழைக்கும் சமுதாயமாக, உணவு படைக்கும் சமுதாயமாக, ஒட்டுப்போடும் சமுதாயமாக, 25 சதவீதத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட சமுதாயமாக உள்ளனர். கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டனர்.
இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்துக் கட்சியினரும் நம்மை ஏமாற்றினார்கள். முதன்முதலில் காங்கிரஸ் கட்சி நம்மை ஏமாற்றியது. அடுத்ததாக திமுக தலைவர் கலைஞர் மிகவும் சாமர்த்தியமாக திட்டம் வகுத்து ஏமாற்றினார். வன்னியர்கள் கல்வி கற்கக் கூடாது; வேலைக்கு செல்லக் கூடாது என்று திட்டமிட்டு தான் ஏமாற்றினார். எம்.ஜி.ஆரும் நம்மை ஏமாற்றினார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்களும் நம்மை ஏமாற்றினர்.1950 களில் வன்னியர்களில் ஊருக்கு ஒருவர் கூட படித்திருக்கமாட்டார்கள். கடிதம் வந்தால் மற்றவர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்வார்கள். தந்தி வந்தால் அடுத்த ஊரில் உள்ள அய்யரிடம் கொடுத்து படிக்கச் சொல்வார்கள். பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்றால் வண்டி சக்கரத்தில் உள்ள கருப்புமையை எடுத்து கைரேகை வைப்பார்கள். அந்த நிலையில் தான் வன்னியர்கள் அப்போது இருந்தார்கள்.
அதன்பிறகு இந்த ராமதாஸ் உருவெடுத்து போராட்டம் நடத்தி பிற்படுத்தப்பட்டோருக்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பிரித்து 20 சதவீத மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்திருக்கா விட்டால் என்ன ஆகியிருக்கும்? இப்போது இருப்பதை விட மிகவும் மோசமான நிலைக்கு வன்னியர் சமுதாயம் சென்றிருக்கும். கலைஞர் 15 உயர்சாதிகளையும், எம்.ஜி.ஆர் 29 உயர்சாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தனர். அவர்களுடன் வன்னியர்களால் போட்டியிடமுடியாது. அதனால் தான் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோருகிறோம். வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
வன்னியர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை கண்டு இன்றைய இளைஞர்கள் கொதித்து போய் இருக்கிறார்கள். அய்யாவையே ஏமாற்றுகிறார்களா என்று ஆவேசமடைந்துள்ளனர். அவர்களை திரட்டிதான் மிகப்பெரிய போராட்டத்தை நாம் நடத்த இருக்கிறோம். குஜராத் மாநிலத்தில் படேல் சமுதாயத்தினர் போராட்டம் நடத்தியது போன்று, குஜ்ஜார் சமுதாயத்தினர் தங்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தியது போன்று நமது போராட்டமும் மிக கடுமையாக இருக்கும். நாம் போராட தொடங்கிய 4 நாட்களில் நமது கோரிக்கையை ஏற்றுகொள்வதாக அரசு அறிவிக்க வேண்டும். அந்த அளவுக்கு நமது போராட்டம் தீவிரமாக இருக்க வேண்டும். இது தொடர்பாக எந்த விளைவுகள் ஏற்பட்டாலும் அதை சந்திக்க நாம்தயாராக உள்ளோம். என்று பொதுக்குழு கூட்டத்தில் மரு. இராமதாஸ் பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.