தண்ணீர் குடிப்பது நல்லது... ஆனால், எப்போது குடிக்கவேண்டும் தெரியுமா?

by SAM ASIR, Nov 25, 2020, 20:45 PM IST

தண்ணீர் அருந்துவது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். உடலில் போதிய நீர்ச்சத்து இருந்தால்தான் உடல் செல்கள் சரியாக செயல்பட முடியும். உடலில் போதுமான நீர்ச்சத்து இருந்தால் நோய்கள் அண்டாமல் பாதுகாப்பாக இருக்கலாம். நீர்ச்சத்து குறைந்து டீஹைரேட்டட் என்ற நிலையை எட்டும்போது தீவிர உடல்பாதிப்பு கூட ஏற்படக்கூடும். தினமும் போதுமான அளவு நீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால், எந்த சமயத்தில் தண்ணீர் அருந்தவேண்டும் என்பதை தெரிந்து கொள்வது நல்லது.

காலை எழுந்ததும்

அதிகாலையில் எழுந்ததும் ஒரு தம்ளர் நீர் அருந்துவது இன்றியமையாதது. காலை எழுந்ததும் நீர் அருந்தினால் உடலின் உள்ளுறுப்புகளை நன்கு செயல்பட தூண்டும். இரவில் உடல் இழந்த நீரின் அளவு ஈடுகட்டப்படும். ஆகவே, காலையில் எழுந்ததும் ஒரு தம்ளர் நீர் பருகுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி முடித்ததும்

உடற்பயிற்சி முடித்ததும் களைப்பாக உணர்வது வழக்கமானதுதான். கடினமான உடற்பயிற்சிகளை செய்து முடித்ததும் நீர் அருந்தினால் மனம் புத்துணர்வு பெறும். உடற்பயிற்சியின்போது அதிகரித்த இதய துடிப்பு மீண்டும் இயல்பு நிலைக்கு வர இது உதவும். ஆகவே, உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு நீர் அருந்தவும்.

சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு

சாப்பிடுவதற்கு முன்பு நீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும். மேலும், உடல் எடை குறையவும் அது உதவும். நீர் அருந்தி அரைமணி நேரம் கழித்த பிறகு சாப்பிட்டால் செரிமானம் தூண்டப்படும். ஓரளவுக்கு சாப்பிட்டதும் திருப்தியாக உணர செய்யும். ஆகவே, தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதும், அதன் காரணமாக உடல் எடை அதிகரிப்பதும் தவிர்க்கப்படுகிறது.

குளிப்பதற்கு முன்பு

குளிப்பதற்கு முன்பு ஒரு தம்ளர் நீர் அருந்துவது இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. குளிப்பதற்கு முன்பு வெதுவெதுப்பான நீர் அருந்தினால் இரத்த நாளங்கள் விரிவடையும். ஆகவே, இரத்த அழுத்தம் குறைகிறது.

படுக்கைக்குச் செல்லும் முன்பு

தூங்க செல்லும் முன்னர் நீர் அருந்தினால், இரவு முழுவதும் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைக்கும். மேலும் உடலிலுள்ள தீமை பயக்கக்கூடிய நச்சுப்பொருள்களை நீர் வெளியேற்றுகிறது. ஒருவேளை இரவு படுக்கச்செல்லும்போது வயிற்றில் வலி இருந்தால், நீர் அருந்தி படுத்தால் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

உடல் நலக்குறைவின்போது

உடல் நலம் ஏதாவது ஒருவிதத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் தயங்காமல் நீர் அருந்துங்கள். உடல் மீண்டும் நலம் பெறுவதற்கு அதிகம் உதவக்கூடிய தன்மை தண்ணீருக்கு உள்ளது. சீக்கிரமாக உடல் நலம் பெற நீர் உதவும். ஆகவே, உடல் நலமில்லாதபோது போதுமான நீர் பருக மறவாதீர்கள்.

You'r reading தண்ணீர் குடிப்பது நல்லது... ஆனால், எப்போது குடிக்கவேண்டும் தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை