குளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நலன்கள் கிடைக்கும்?

by SAM ASIR, Nov 25, 2020, 21:05 PM IST

நெல்லிக்காயில் அநேக சத்துகள் உள்ளன என்பதை நாம் அறிந்திருப்போம். வைட்டமின் சி, இரும்பு சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து (கால்சியம்) ஆகியவை இதில் அதிக அளவில் உள்ளன. நெல்லிக்காய் விலை மிகுந்தததல்ல. குறிப்பாக, உடல் நலத்திற்கென்று செலவு பிடிக்கும் வைத்தியத்தை யாராவது கூறினால் அதை நாம் நம்புகிறோம். ஆனால், இந்த எளிய காய் உடலுக்கு நன்மை செய்கிறது என்றால் நம்ப தயங்குகிறோம். உண்மையில் நெல்லிக்காய் நம் உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை செய்யக்கூடியது. நெல்லிக்காயை சாறெடுத்து நெல்லி ஜூஸ் அருந்தலாம். உலர வைத்து பொடியாக்கி சாப்பிடலாம். சட்னி செய்யலாம்; சிலர் ஊறுகாய் செய்து சாப்பிடுகிறார்கள். இன்னும் சிலர் நெல்லிக்காயை வெல்லத்தோடு சேர்த்து சாப்பிடுகிறார்கள். குளிர்காலத்தில் நம் உடலுக்குத் தேவையான வெப்பத்தை தரக்கூடியது வெல்லம். ஆகவே, நெல்லிக்காயை வெல்லத்தோடு சேர்த்து சாப்பிடுவது கூடுதல் பலன் தரும்.

நோய் எதிர்ப்பு ஆற்றல்

வைட்டமின் சி சத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அளிக்கிறது என்பதை அதிக கேள்விப்பட்டிருப்போம். கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பாற்றல் குறித்து அதிக தகவல்கள் நம்மை வந்தடைந்துள்ளன. அவை எல்லாவற்றிலுமே வைட்டமின் சி சத்து அடங்கிய உணவு பொருள்களை சாப்பிடும்படி கூறப்பட்டுள்ளன. நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து அதிகமுள்ளது. ஆகவே, குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் முதியோர் இதை சாப்பிட்டு நோய்கள் தாக்காதவண்ணம் உடலை பாதுகாத்துக்கொள்ளலாம்.

இதய ஆரோக்கியம்

இதயத்தின் தமனிகளை உறுதியாக்கக்கூடிய பண்பு வைட்டமின் சி சத்துக்கு உண்டு. அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ரால் இருக்கிறது என்று தெரிய வந்தால் நெல்லிக்காய் சாப்பிட ஆரம்பியுங்கள். கெட்ட கொலஸ்ட்ரால் இருப்பவர்களின் இதயத்தை ஆரோக்கியமாக காக்கக்கூடிய ஆற்றல் நெல்லிக்காய்க்கு உள்ளது.

இளமை அழகு

சருமம், கூந்தல் இரண்டுமே உடலுக்கு நல்ல தோற்றப்பொலிவை தரக்கூடியவை. இரண்டின் ஆரோக்கியத்திற்கும் நெல்லிக்காய் உதவுகிறது. கொலாஜன் என்ற புரதம் உருவாவதற்கு வைட்டமின் சி உதவும். இந்த புரதம் சருமத்தை இறுக்கமாக வைக்கிறது. அதனால் முதுமை தோற்றம் ஏற்படாது. நெல்லி பொடியை யோகர்ட்டுடன் சேர்த்து ஃபேஸ்மாஸ்க்காக பயன்படுத்தலாம். கூந்தல் ஆரோக்கியத்திற்கு நெல்லிக்காய் பொடியை தேங்காயெண்ணெய் அல்லது நல்லெண்ணெயுடன் சேர்த்து தலையில் மசாஜ் செய்தால் கூந்தல் ஆரோக்கியம் பெறும். பொடுகு தொல்லை நீங்கும்.

மூட்டு வலி

உடலில் அழற்சி ஏற்பட நிலையற்ற அணுக்கள் (ஃப்ரீ ராடிகல்ஸ்) காரணமாகின்றன. அழற்சியின் காரணமாக மூட்டு வலி ஏற்படுகிறது. நெல்லிக்காய்க்கு அழற்சியை தடுக்கும் பண்பு உண்டு. தினமும் நெல்லிக்காய் உண்டு வந்தால் இதுபோன்ற அழற்சியிலிருந்து உடலை காப்பாற்றலாம். குளிர்காலத்தில் துன்புறுத்தக்கூடிய மூட்டு வலி அண்டாது.

You'r reading குளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நலன்கள் கிடைக்கும்? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை