குளிர்கால நோய்களிலிருந்து தப்பிக்க உதவும் உணவு பொருள்கள் எவை தெரியுமா?

by SAM ASIR, Nov 29, 2020, 20:39 PM IST

குளிர்காலம் வந்துவிட்டால் பலருக்கு மனநிலை மந்தமாகிவிடும். குளிராக இருப்பதால் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. தூங்கிவழிவதுபோல் இருக்கும். மனப்போக்கில் மாற்றத்தை கொண்டு வரவும், குளிர்காலத்தில் உடலை ஆரோக்கியமாக காத்துக்கொள்ளவும் சில உணவுகள் உதவும். குளிர் வந்தவுடன் பொரித்த உணவுகள், நொறுக்கு தின்பண்டங்கள், சர்க்கரை சேர்த்த இனிப்புகள் ஆகியவற்றை சாப்பிட தொடங்கிவிடக்கூடாது. நல்ல ஊட்டச்சத்துகளை கொண்ட உணவுகளை சரியான அளவில் சாப்பிடவேண்டும்.

ஆப்பிள்
உடலுக்கு வெதுவெதுப்பை கொடுக்கக்கூடியது ஆப்பிள். குவர்சிட்டின் போன்று ஆப்பிளில் இருக்கும் பாலிபீனால்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக காக்கின்றன. ஆப்பிள் தின்பதால் புற்றுநோய் மற்றும் ஆஸ்துமாவிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். ஆப்பிளை சாப்பிட்டால் உடலில் சேரக்கூடிய சர்க்கரையின் அளவு குறைவு. இது குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டது. ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே, நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் சாப்பிடலாம். உடலிலிருந்து யூரிக் அமிலத்தை அகற்றவும் ஆப்பிள் உதவுகிறது. காலை உணவுக்குப் பிறகு, மதிய உணவுக்கு முன்பாக ஆப்பிளை சாப்பிடுவது நல்லது.

வெங்காயம்
சமையலில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது வெங்காயம். இது குளிர்காலத்தில் உடலுக்கு வெப்பமளிக்கக்கூடியது. உடலுக்குத் தீமை செய்யக்கூடிய பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படக்கூடிய வெங்காயம், உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்களுக்கு உணவாகிறது. இதன் மூலம் உடலின் செரிமான ஆற்றல் காக்கப்படுகிறது. புற்றுநோயை தடுக்கும் இயல்பும் இதற்கு உள்ளது. வெங்காயத்தை உணவில் சேர்த்து சாப்பிடலாம்.வெங்காயத்தில் சூப் (soup) செய்து சூடாக அருந்துவது நல்லது.

வெள்ளைப் பூண்டு
பூண்டிலுள்ள அழற்சிக்கு எதிராக செயல்படும் தன்மை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. வாயுவை குறைக்கவும், மலச்சிக்கலை போக்கவும், நோய் தொற்றுக்கு எதிராகவும் வெள்ளைப் பூண்டு செயல்படும். வெள்ளைப் பூண்டை பச்சையாகவும், வறுத்தும் சாப்பிடலாம்.

இஞ்சி
உடலுக்கு வெதுவெதுப்பை அளிப்பதோடு வளர்சிதை மாற்றத்தை (மெட்டாபாலிசம்) தூண்டுகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரித்து செரிமானத்திற்கு உதவுகிறது. செரிமானம் ஊக்கப்படுத்தப்படுவதால் உடல் பருமனாவது தடுக்கப்படுகிறது. இஞ்சியை டீயில் சேர்த்து பருகலாம். வேறு உணவுகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

நட்ஸ்
நட்ஸ் எனப்படும் அல்மாண்ட், வால்நட், பூசணி விதை, சூரியகாந்தி விதை, எள் போன்ற கொட்டை பருப்பு மற்றும் விதை வகைகள் மாலை அல்லது இரவில் சாப்பிடக்கூடியவை. இவற்றை சூப் (soup)பில் சேர்த்தும் அருந்தலாம்.

மஞ்சள்
இது வயிற்றையும் ஈரலையும் காக்கக்கூடியது. நாம் சாப்பிடும் உணவிலிருந்து ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படும்படி அவற்றை உடைக்கிறது. அழற்சிக்கு எதிராக செயல்பட்டு, இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. முடக்குவாதத்திற்கு சிகிச்சை எடுப்போருக்கு ஏற்றது. ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாக (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்) செயலாற்றுகிறது. மூளைக்கு உற்சாகமளிக்கிறது. சமையலில் சேர்க்கலாம்.

இறைச்சி
கொழுப்பு குறைந்த புரதம் அதிகமான மீன் மற்றும் கோழியிறைச்சி உடலுக்கு வெதுவெதுப்பை தரக்கூடியது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடியது.

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்