கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவா? நஷ்டஈடு கேட்கும் சென்னை தன்னார்வலர்

by SAM ASIR, Nov 30, 2020, 09:02 AM IST

கொரோனா நோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் கண்டுபிடிப்பான கோவிஷீல்டு என்ற தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் இந்தியாவின் சீரம் நிறுவனம் இணைந்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பு மருந்தை ஆய்வு செய்யும் பணி சென்னையிலும் நடந்து வருகிறது. சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் தனக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டதால் உடல்நிலையில் மிகவும் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நஷ்டஈடு கோரியுள்ளார்.

40 வயது ஒருவர் சென்னையில் வணிக ஆலோசகராக பணிபுரிகிறார். அவர் கோவிஷீல்டு பரிசோதனையில் தன்னார்வலராக இணைந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி அவருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர் தனக்கு மூளையின் செயல்பாடுகள் மாறுவதினால் ஏற்படும் நரம்பு பாதிப்பு (neuro encephalopathy) தாக்கியிருப்பதாகவும், இதனால் தமக்கும் தம் குடும்பத்தினருக்கும் இப்போது ஏற்பட்டிருக்கும் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் இழப்புகள் குறைந்தபட்சமாகவேனும் ஈடு செய்யப்படவேண்டும் என்றும் கோரி ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அவரது குற்றச்சாட்டை மறுத்துள்ள சீரம் நிறுவனம், தன்னார்வலரின் உடல்நிலை பாதிப்பு குறித்து வருத்த முற்றிருப்பதாகவும், ஆனால் அவருக்குத் தற்போது ஏற்பட்டிருக்கும் உடல்நல பாதிப்புக்கும் கோவிஷீல்டு மருந்தின் செயல்பாட்டுக்கும் எந்தவகையிலும் தொடர்பு இல்லையென்றும் கூறியுள்ளது. தவறான நோக்கத்தோடு, நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும்வகையில் இக்குற்றச்சாட்டைக் கூறியுள்ளதால் தன்னார்வலரிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கோர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சீரம் நிறுவனத்தோடு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பிரிட்டனின் அஸ்ட்ராஸென்கா, இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைமை அதிகாரி, ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து ஆய்வின் தலைவர், ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தன்னார்வலரின் வழக்குரைஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை