ரஜினி புதுக்கட்சி தொடங்குவாரா? இன்று இறுதி முடிவு... நிர்வாகிகளுடன் ஆலோசனை..

by எஸ். எம். கணபதி, Nov 30, 2020, 09:12 AM IST

ரஜினி புது கட்சி தொடங்குவாரா என்ற 25 ஆண்டுக் கால கேள்விக்கு இன்றாவது உறுதியான பதில் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இன்று அவர் தனது மன்ற நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமெனக் கடந்த 25 ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அவர், நான் அரசியலுக்கு வருவது உறுதி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று அறிவித்திருந்தார். அதன்பிறகு, அவர் வழக்கம் போல் மவுனம் சாதிக்கத் தொடங்கினார்.

கடந்த மார்ச் மாதம் திடீரென அவர் நிருபர்களுக்கு ஒரு பேட்டி அளித்தார். அப்போது அவர், கட்சி பதிவு பண்ணி, கொள்கைகள் அறிவித்து, மாநாடு நடத்தி இந்த தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற வேண்டாமா? நடிகர் என்ற பிரபலத்தை வைத்துக் கொண்டு 15 முதல் 20 சதவீதம் வாக்குகளைப் பெறுவதற்குத்தான் தேர்தலில் போட்டியிட வேண்டுமா? இதற்காக ரசிகர்கள் தங்கள் சொத்துக்களை விற்று பணத்தைச் செலவழிக்க வேண்டுமா? நாம் தேர்தல் களத்தில் திமுக, அதிமுக என்ற 2 மிகப் பெரிய ஜாம்பவான்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

எனவே, இந்த 54 ஆண்டுக்கால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் எழுச்சி தேவை. மக்கள் எழுச்சி ஏற்பட்டால் நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருந்தார்.
இதன் பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் ரஜினி அறிக்கை என்ற பெயரில் ஒரு அறிக்கை உலா வந்தது. அதில் அவர், தனக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தவுடன் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுத்தான் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், டிசம்பருக்குள் மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் ஜனவரி 15-ம் தேதி தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கை பற்றி அனைத்து சேனல்களிலும் விவாதங்கள் நடந்தன. இதற்குப் பிறகு 2 நாள் கழித்து ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டார். அதில் அவர், என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை.

இதைப் பற்றித் தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்" என்று தெரிவித்திருந்தார். அரசியலுக்கே வராமல் இப்படி நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்டுள்ள ரஜினி இன்று(நவ.30) தனது இறுதி முடிவை அறிவிக்கப் போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம், அவர் தனது மன்ற நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தைக் கூட்டியிருப்பதுதான்.இன்று காலை 10 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரஜினி மக்கள் மன்ற 38 மாவட்டச் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் காலை 9 மணிக்கே மண்டபத்திற்கு வந்து விட வேண்டும் என்றும், அனைவரும் தவறாமல் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ரஜினி தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியல் பிரவேசத்தை மேலும் தள்ளிப் போடுவாரா, அல்லது புதிய கட்சி பற்றி அறிவிப்பை வெளியிடுவாரா அல்லது நிர்வாகிகளின் கருத்தைக் கேட்டு விட்டு தனது முடிவை அறிவிக்காமலேயே விட்டு விடுவாரா என்பது போன்ற கேள்விகளுக்கு இந்த கூட்டத்தில் பதில் கிடைக்கலாம்.

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்