"உங்களுக்கு எவ்வளவு இருக்கு?" "எனக்கு...." இப்படி இருவர் பேசிக்கொண்டிருந்தால் அது கடனோ, சொத்தோ என்று நாம் நினைக்கவேண்டியதேயில்லை. "சுகர்" என்பதுதான் விடை. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை விசாரிப்பதே ஒரு நாகரிகம் என்ற அளவில் அத்தனை பேருக்கும் நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முப்பது வயதை தாண்டினாலே "சுகர் பார்த்திடலாம்" என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பொறுத்தே நம்முடைய வியாதிக்கான காரணங்களை அவர்கள் கண்டுபிடிக்க முடிகிறது. பரம்பரையாக இப்பாதிப்பு வருகிறது என்று கூறப்பட்டாலும், உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் நீரிழிவு பாதிக்காமல் தடுக்க முடியும். பாதிப்பு ஏற்பட்டாலும் சில இயற்கை முறைகளால் அதை கட்டுக்குள் வைக்கவும் முடியும்.
நெல்லி, இஞ்சி, பட்டை நீர்
முறை 1:
தேவையானவை: முழு நெல்லி -2, இஞ்சி -அரை அங்குலம், இலவங்க பட்டை பொடி - அரை தேக்கரண்டி
செய்முறை: நெல்லிக்காயை விதை நீக்கி, நன்கு இடிக்கவும். இஞ்சியை சீவிக்கொள்ளவும். அவை இரண்டையும் நீரில் வேக விடவும். கொதித்ததும் பட்டை பொடியை சேர்த்து பின்னர் அடுப்பை அணைக்கவும். பாத்திரத்தை 3 முதல் 4 நிமிட நேரத்திற்கு மூடிவைக்கவும். பின்னர் நீரை வடிகட்டி அருந்தவும்.
முறை 2:
தேவையானவை: உலர்ந்த நெல்லிப் பொடி - 1 தேக்கரண்டி, உலர்ந்த இஞ்சி பொடி - 1 தேக்கரண்டி, பட்டை பொடி - அரை தேக்கரண்டி
செய்முறை: ஒரு கோப்பையில் நீரை கொதிக்க வைக்கவும். மேற்கூறிய அனைத்தையும் அதில் சேர்த்து கலக்கவும். கோப்பையை 2 முதல் 3 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் வடிகட்டாமல் அப்படியே அருந்தவும்.
நெல்லிக்காய் பொடி செய்யும் முறை: நெல்லிக்காய் பொடியை வீட்டிலேயே எளிதாய் செய்யலாம். நெல்லிக்காயை சுத்தப்படுத்தி, விதைகளை நீக்கவும். பிறகு சிறு துண்டுகளாக அரிந்துகொள்ளவும். நெல்லிக்காய் துண்டுகளை 3 முதல் 4 நாள்கள் நல்ல வெயிலில் உலர்த்தவும். அவை நன்றாக காய்ந்தவுடன் அதை மிக்ஸியில் (பிளண்டர்) போட்டு பொடியாக்கவும். பின்னர் காற்றுப் புகாத கலன்களில் சேமிக்கவும். மேற்கூறிய முறைகள் எப்படி இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்? என்று கேட்க தோன்றும். நெல்லிக்காய், இஞ்சி மற்றும் இலவங்கப் பட்டை ஆகியவை மருத்துவ குணங்கள் நிரம்பியவை.
நெல்லிக்காய்:
வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் (சுண்ணாம்புச் சத்து) உள்ளிட்ட அநேக சத்துகள் இதில் அடங்கியுள்ளன. நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் இதன் பங்கு அதிகம். அஸ்கார்பிக் அமிலம் போன்ற ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள் (ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள்) , டானின்கள், பாலிபீனால்கள் நெல்லிக்காயில் அடங்கியுள்ளன. நெல்லிக்காய் உடலின் வளர்சிதை மாற்றத்தை (மெட்டாபாலிசம்) ஊக்குவிக்கக்கூடியது. ஆகவே, நீரிழிவை கட்டுப்படுத்த உதவுகிறது. வைட்டமின் சி சத்து, உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதுடன், வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
இஞ்சி:
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இஞ்சி பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஞ்சிக்கு இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் செயல்திறன் உள்ளது. கார்போஹைடிரேட் வளர்சிதை மாற்றம் மற்றும் ஒட்டுமொத்த இன்சுலினுக்கான உணர்திறனை பாதிக்கக்கூடிய நொதிகள் (என்சைம்) சுரப்பை இஞ்சி கட்டுப்படுத்துகிறது.
இலவங்கப் பட்டை:
உடலிலுள்ள குளூக்கோஸின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய திறன் இலவங்கப் பட்டைக்கு உண்டு. செரிமானத்தை ஊக்குவித்து தேவைக்கு அதிகமான சர்க்கரையை உடலைவிட்டு வெளியேற்றுகிறது. குறிப்பாக பெருமளவில் சாதாரணமாக காணப்படும் வகை 2 நீரிழிவை இது நன்கு கட்டுப்படுத்துகிறது. நீரிழிவின் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் இலவங்கப் பட்டை தடுக்கிறது.