இதய பாதிப்பு உயிருக்கு அச்சுறுத்தலாக ஒன்றாகும். ஆதரோஸ்கிளேரோசிஸ் (Atherosclerosis) என்ற இதய பாதிப்பு உலகில் பலர் உயிரிழப்பதற்கான அடிப்படை காரணமாக இருக்கிறது. இதய தமனிகளில் கொழுப்பு படிவதால் இப்பாதிப்பு உருவாகிறது. இதயத்தில் கொழுப்பு படிவதற்குக் கெட்ட கொலஸ்ட்ராலே காரணமாக இருக்கிறது.
கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும் இயல்பு காரட்டுக்கு இருக்கிறது என்று ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. காரட்டுக்கு ஆரஞ்சு நிறத்தை அளிப்பது பீட்டா கரோட்டின் என்ற பொருளாகும். இந்த பீட்டா கரோட்டின் நம் உடலில் வைட்டமின் ஏ சத்தாக மாற்றப்படுகிறது. இதற்கு பீட்டா கரோட்டின் ஆக்ஸிஜனேஸ் 1 (பிசிஓ1) என்ற நொதி (என்சைம்) பயன்படுத்தப்படுகிறது. பீட்டா கரோட்டின் ஆக்ஸிஜனேஸ் அதிகம் இருப்பவர்களுக்குக் கெட்ட கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மரபு ரீதியாகச் சிலருக்கு பிசிஓ1 அதிகமாக உள்ளது. சிலருக்குச் சற்று குறைவாக உள்ளது. குறைவாக இருப்போர் வைட்டமின் ஏ அதிகமுள்ள உணவுப்பொருள்களைச் சாப்பிடுவது அவசியம். 18 முதல் 25 வயது உடைய 767 ஆரோக்கியமான வாலிபர்களின் இரத்தம் மற்றும் மரபணு (டிஎன்ஏ) மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இதன் மூலம் பீட்டா கரோட்டின் ஆக்ஸிஜனேஸுக்கும் கெட்ட கொலஸ்ட்ராலும் உள்ள தொடர்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆகவே, காரட்டுக்குக் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் உண்டு என்பது தெரிய வந்துள்ளது. காரட் அதிகம் சாப்பிடுவதால் இதய பாதிப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.