மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக இடையேயான போர் முற்றுகிறது. பாஜக தலைவர் நட்டா கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு திரும்ப அழைத்துள்ளது.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய அரசுக்கும் இடையே நீண்ட காலமாகப் பிரச்சினை இருந்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை பிடிக்க பாஜக இப்போதே திட்டம் தீட்டி வருகிறது. இதற்காக பாஜக தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்படத் தலைவர்கள் அடிக்கடி மேற்குவங்க மாநிலத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக தேசிய தலைவர் நட்டா கொல்கத்தா சென்றார். அப்போது அவரது கார் மீது கல்வீசி தாக்கப்பட்டதில் அவரது கார் சேதமடைந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்குப் பின்னர் பாஜக மற்றும் மம்தா பானர்ஜிக்கும் இடையேயான பிரச்சினை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், பாஜக தலைவர் கொல்கத்தா வந்த விவரம் எங்களுக்குத் தெரியாது. அவரது வருகை குறித்து முறைப்படி அரசுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பாஜகவினர் நாடகமாடுகின்றனர். அவர்களுக்கு வேறு வேலை கிடையாது என்று கிண்டலடித்தார்.
இதற்கிடையே மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டதாகவும் எனவே அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில கவர்னர் ஜக்தீப் தன்கருக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து உடனடியாக கவர்னர் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். இதற்கிடையே மேற்குவங்க தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியை 14ம் தேதி டெல்லியில் ஆஜராக மத்திய உள்துறை உத்தரவிட்டது.
ஆனால் இருவரையும் டெல்லிக்கு அனுப்ப முடியாது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் நடந்த போது பாதுகாப்புப் பணியில் இருந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு டெல்லிக்குத் திரும்ப அழைத்துள்ளது. இந்த சம்பவத்தால் மம்தா பானர்ஜி மற்றும் மத்திய அரசு இடையேயான மோதல் மேலும் மோசமடைந்துள்ளது.