இரத்த அழுத்தத்தில் ஏற்படும் பாதிப்பு பல்வேறு உடல் நலக்கோளாறுகளுக்கு காரணமாகிவிடுகிறது. உரிய சிகிச்சையளிக்காவிட்டால் உயர் இரத்த அழுத்தம், இரத்த தமனிகளை பாதித்து மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு மற்றும் பார்வையில் பாதிப்பு ஏற்பட வழிவகுக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வாழ்வியல் முறைகளில் சில மாற்றங்களை செய்வதே முதல் வழியாக கருதப்படுகிறது. உப்பு குறைந்த உணவுகளை சாப்பிடுதல், தவறாமல் உடற்பயிற்சி செய்தல், மது அருந்தாமல் இருத்தல் மற்றும் மன அழுத்தத்தை சரியானபடி கையாளுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் உயர் இரத்த அழுத்தத்தை நிச்சயமாக கட்டுப்படுத்த இயலும். அதனால் வரும் பெரிய அளவிலான பாதிப்புகளை தவிர்க்க முடியும். பலர் உயர் இரத்த அழுத்த பாதிப்புக்கு மாத்திரை உட்கொண்டு வருவர். இவர்களுக்கும் தங்கள் இரத்த அழுத்தத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது அவசியம். இரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதில் வாசனை எண்ணெய்கள் (essential oils) உதவுகின்றன என்று ஒரு கருத்து நிலவுகிறது.
வாசனை எண்ணெய்கள்
இரத்த அழுத்தத்தை நேரடியாக பாதிக்கக்கூடியது மன அழுத்தமாகும். மன அழுத்தம் அதிகமாக சாப்பிடும்படி தூண்டுகிறது. ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவு பொருள்களை சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்தம் உயருகிறது. லாவண்டர், ரோஸ், யூகலிப்டஸ் உள்ளிட்ட வாசனை எண்ணெய்கள் கொரிஸ்டால் என்ற ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்துகின்றன. நல்ல வாசனையை நுகரும்போது மனம் சந்தோஷமாக உணருகிறது. நரம்பு மண்டலம் அமைதியாகிறது. கொரிஸ்டால் போன்ற ஹார்மோன்கள் சுரப்பு மட்டுப்படுத்தப்பட்டு இரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது. இஞ்சி, கறுப்பு மிளகு மற்றும் மஞ்சள் இவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் தமனியை விரிவாக்கியும் அழற்சியை குறைத்தும் இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன.
ஆய்வு
வாசனை எண்ணெய்களை கொண்டு சிறிய ஆய்வு ஒன்று செய்யப்பட்டது. இதில் 29 ஆண்கள் சோதிக்கப்பட்டனர். உயர் இரத்த அழுத்தம் கொண்ட இவர்களுள் ஒரு குழுவினர் வாசனை எண்ணெய் இருந்த அறையினுள் அமர்த்தப்பட்டனர். மற்றவர்கள் சாதாரண அறையினுள் அமர்த்தப்பட்டனர். ஒரு மணி நேரம் கழித்து இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டபோது, வாசனை எண்ணெய் இருந்த அறையினுள் இருந்தவர்களின் இரத்த அழுத்தம் 115/66 என்ற அளவிலிருந்து 97/59 என்ற அளவாக குறைந்திருந்தது. லாவண்டர் ஆயில் போன்ற எண்ணெய்களை நுகருவோருக்கு மனம் அமைதியாகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எப்படி பயன்படுத்துவது?
வாசனை எண்ணெய்களை பயன்படுத்த இன்ஹேலர்கள் கிடைக்கின்றன. அரோமா ஸ்டிக் (aroma stick) என்றும் கிடைக்கிறது. இவை எதையும் பயன்படுத்தாமல் சிறிது பஞ்சில் வாசனை எண்ணெயை எடுத்து நுகர்தலும் பயன் தரும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த மருந்து சாப்பிடுவோர், மருந்தினை நிறுத்தக்கூடாது. மருந்து சாப்பிட்டபடியே வாசனை எண்ணெயை பயன்படுத்தலாம். இரத்த அழுத்தத்தைப் பொறுத்தமட்டில் அது குறைகிறது மருத்துவரால் உறுதி செய்யப்பட்டால் அவரே மருந்தின் அளவை குறைக்கும்படி அறிவுறுத்துவார்.