சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மகரவிளக்கு காலம் 20ம் தேதியுடன் நிறைவடைகிறது. நாளை இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. மறுநாள் 31ம் தேதி முதல் மகர விளக்கு பூஜைகள் தொடங்கின. பிரசித்திபெற்ற மகர விளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் கடந்த 14ம் தேதி நடைபெற்றது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்ப விக்கிரகத்தில் திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம்.
இந்த திருவாபரணம் பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டது. 14ம் தேதி மாலை 6.30 மணியளவில் திருவாபரணம் ஐயப்ப விக்கிரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. இந்த சமயத்தில் சபரிமலை பொன்னம்பலமேட்டில் 3 முறை மகரஜோதி தெரிந்தது. இதை சபரிமலையில் திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசித்தனர். கொரோனா பரவல் காரணமாக இம்முறை சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வரும் 20ம் தேதி காலை 6.30 மணியளவில் சபரிமலை கோவில் நடை சாத்தப்படுகிறது. நாளை இரவு 9 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் இன்றுடன் நிறைவடைந்தது. 20ம் தேதி பக்தர்கள் யாரும் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. அன்றுடன் இவ்வருட மகரவிளக்கு காலம் நிறைவடையும். மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி மாதம் 12ம் தேதி நடை திறக்கப்படும். பிப்ரவரி 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை மாசி மாத பூஜைகள் நடைபெறும்.