பக்கவாதம் ஏன் ஏற்படுகிறது? அதை தவிர்ப்பது எப்படி?

by SAM ASIR, Feb 3, 2021, 19:05 PM IST

ஸ்ட்ரோக் என்னும் பக்கவாதம் பாதிக்கப்பட்டவரை வெளியே நடமாடமுடியாமல் வீட்டுக்குள்ளே முடக்கிப் போட்டுவிடக்கூடியது. பக்கவாதத்திற்கு பெரும்பாலும் காரணமாகக்கூடியது. இதயத்தின் சீரான துடிப்பில் ஏற்படும் பாதிப்புதான். இது ஏட்ரியல் ஃபிப்ரிலேசன் எனப்படுகிறது. இருதயத்தின் மேற்புறம் இருக்கும் இரண்டு அறைகளிலும் சீரற்ற மின் சமிக்ஞைகள் (chaotic electrical signals) ஏற்படும்போது இருதயத்தின் கீழ் அறைகளான வென்டிரிகிள்களுடன் இசையாமல் மேல் அறைகள் இயங்குகின்றன. அப்போது இருதயம் வேகமாக துடிக்கிறது. ஏட்ரியல் ஃபிப்ரிலேசன் பாதிப்பின் போது இருதயம் நிமிடத்திற்கு 100 முதல் 175 முறை துடிக்கிறது.

பக்கவாதம் எப்படி ஏற்படுகிறது?
உலக அளவில் ஏட்ரியல் ஃபிப்ரிலேசன் பொது ஆரோக்கிய பிரச்னையாக அறியப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டு காலத்தில் மட்டும் இந்தப் பாதிப்புள்ளோரின் எண்ணிக்கை 33 சதவீதம் உயர்ந்துள்ளது. 2050ம் ஆண்டில் இது 60 சதவீதத்திற்கும் மேலாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நோயுறுதலுக்கும் உயிரிழப்பும் முக்கியமான காரணமாக இருந்தால்கூட இதைப் பற்றிய விழிப்புணர்வு போதிய அளவு இல்லை. ஏட்ரியல் ஃபிப்ரிலேசன் காரணமாக இருதயத்தில் இரத்தம் உறைந்து கட்டிகள் உருவாகின்றன. இவை இரத்த நாளத்தில் பயணித்து மூளையை அடைந்து அடைத்துக்கொண்டு பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்படுவோர் கடுமையான பொருளாதார சுமை, உணர்ச்சி மற்றும் சமுதாய பாரங்களால் அவதிப்படுகின்றனர். நோயுறுவோர் மட்டுமல்ல, அவர்களை பராமரிப்பவர்களுக்கும் இது பெரிய பாரமாகிறது.

அறிகுறிகள்
ஏட்ரியல் ஃபிப்ரிலேசன் பாதிப்புக்கு அறிகுறிகள் தெரியாமலும் இருக்கக்கூடும். இதய படபடப்பு, அசரி, தலை கனத்தல் மற்றும் மூச்சிரைப்பு ஆகிய அறிகுறிகள் இருப்போர் இதய பரிசோதனை (ECG) செய்தால் இதை கண்டுபிடிக்க ஓரளவு வாய்ப்புள்ளது.

தவிர்ப்பது எப்படி?
இரத்தம் உறைவதை தடுத்து, அடர்த்தியை குறைக்கும் மருந்துகள் பரிந்துரைத்தல், மின் அதிர்ச்சி மற்றும் சிறு அறுவை சிகிச்சை ஆகியவற்றை மருத்துவர்கள் செய்யக்கூடும். ஆனாலும் வயது மூப்பு, ஏற்கனவே இருக்கும் இதய பாதிப்புகள் ஏட்ரியல் ஃபிப்ரிலேசனுக்கு வழி வகுக்கக்கூடும். உயர் இரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு), நீரிழிவு, தைராய்டு பிரச்னைகள், ரூமடிக் இதய வால்வு பிரச்னைகள் இருப்போர் அதிக கவனமுடன் ஆரோக்கியத்தை பராமரிக்கவேண்டும்.
சர்க்கரை மற்றும் கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடுதல், ஒழுங்காக உடற்பயிற்சி செய்தல், உடல் எடையை சரியான அளவில் பராமரித்தல், மது மற்றும் புகை பழக்கங்களை விடுதல், இரத்த அழுத்தத்தை சீராக வைத்தல் ஆகியவை இந்த தீவிர பாதிப்பு ஏற்படாமல் தடுக்கக்கூடிய சில வழிமுறைகளாகும்.

You'r reading பக்கவாதம் ஏன் ஏற்படுகிறது? அதை தவிர்ப்பது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை