ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண்ணை தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் நீதிமன்றத்தில் சரணடைந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் பூங்கொடி என்ற பெண் ஸ்டாலினிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதிமுகவைச் சேர்ந்த பூங்கொடி அமைச்சர் ஒருவரின் தூண்டுதலின் பேரிலேயே திட்டமிட்டு குழப்பம் விளைவிக்க இதில் கலந்து கொண்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் காரணமாக அவரை திமுகவினர் கூட்டத்தில் இருந்து வெளியேற்றினர். இதையடுத்து பூங்கொடி தன்னை துன்புறுத்தியதாக திமுகவை சேர்ந்த ராஜேந்திரன், சாமிபையன், ரங்கசாமி, ராஜா ஆகியோர் மீது போலீசில் புகார் செய்திருந்தார் இதுதொடர்பாக போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான நால்வரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெறுமாறு அறிவுறுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து நால்வரும் இன்று கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அவர்களது மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை தொண்டாமுத்தூ காவல் நிலையத்தில் தினமும் காலை மாலை இரு வேளையும் தவறாமல் கையொப்பம் இட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.