கான்ஸ்டிபேஷன் என்பது என்ன? அதன் விளைவு என்ன? எப்படி தவிர்க்கலாம்?

by SAM ASIR, Mar 9, 2021, 19:55 PM IST

நாம் எதை மலச்சிக்கல் (கான்ஸ்டிபேஷன்) என்று நினைக்கிறோம் என்பதை முதலில் தெளிவு செய்து கொள்வது அவசியம். மருத்துவ வரையறையின்படி வாரத்திற்கு மூன்று முறைக்குக் குறைவாக மலம் கழிந்தால் அது மலச்சிக்கல் என்று கூறப்படுகிறது. சிலர் ஒருநாளில் இரண்டு முறை மலம் கழிப்பார்கள்; சிலரோ வாரத்திற்கு நான்கு முறை மட்டுமே கழிப்பார்கள். ஒவ்வொருவருடைய உடல் அமைப்பு, செயல்பாட்டையும் பொறுத்து இது அமைகிறது. ஆனால், வழக்கமாக ஒருவர் கழித்துக்கொண்டிருந்த எண்ணிக்கையைக் காட்டிலும் தொடர்ந்து குறைவாகவே மலம் கழித்தால் அந்நிலையே மலச்சிக்கல் எனப்படுகிறது.

முதியவர்களுக்கு மட்டுமல்ல!
2018ம் ஆண்டு கணக்கெடுப்பு ஒன்றின்படி இந்தியாவில் வயது வந்த பெரியவர்களில் 22 சதவீதத்தினர் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. பெருநகரங்களில் வசிப்பவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் முதியவர்களுக்கு மட்டுமே மலச்சிக்கல் ஏற்படும் என்று எண்ணுகின்றனர்; ஆனால் நடுத்தர வயதினர் மற்றும் இளம் வயதினருக்கும் இப்பிரச்னை உள்ளது. செரிக்கப்பட்ட உணவு கழிவு பெருங்குடலில் மெதுவாக நகருவதே மலச்சிக்கலுக்குக் காரணமாகும். அதன் காரணமாக மலம் கழிப்பது குறைகிறது; சிலருக்கு ஒழுங்கற்ற நிலை ஏற்படுகிறது.

எங்கே கோளாறு?
நாம் சாப்பிடும் உணவும் அருந்தும் பானங்கள் ஆகியவை விழுங்கப்பட்டதும் உணவு குழல் வழியாக வயிற்றுக்குள் செல்கின்றன. வயிற்றுக்குள் இருக்கும் அமிலங்கள் மற்றும் நொதிகள் (என்சைம்) செரிமானத்தை ஆரம்பிக்கின்றன. பிறகு சிறுகுடலுக்குள் உணவு செல்கிறது. சிறுகுடலில் நொதிகளின் (என்சைம்) வேலை முடிந்து, உணவிலுள்ள ஊட்டச்சத்துகளை குடல் உறிஞ்சுகிறது. மிஞ்சிய உணவு பெருங்குடல் வழியாக கழிவாக வெளியேறுகிறது. பெருங்குடலிலிருந்து மலக்குடலுக்குச் செல்லும்போது அக்கழிவிலுள்ள நீர் உறிஞ்சப்படுகிறது. மலம் வெளியேறுகிறது. பெருங்குடலில் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக கழிவு நகர்வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. குடலின் உள்சுவரிலுள்ள தசைகள் மெதுவாக செயல்படுவதால் கழிவிலுள்ள நீர் பெருங்குடலிலேயே உறிஞ்சப்பட்டு மலம் கடினமாக, வறண்டதாக மாறுகிறது. நாம் சாப்பிடும் சில மருந்துகள் இதற்குக் காரணமாகலாம். கர்ப்பிணிகளுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். பெரும்பாலும் குறைவான உடல் செயல்பாடு, நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடாமை மற்றும் குறைவாக நீர் பருகுதல் ஆகியவை இதற்குக் காரணமாகின்றன.

விளைவு
மலம் ஏற்ற நேரத்தில் வெளியேறாவிட்டால் பெருங்குடலில் வாயு உற்பத்தி ஆகும். இந்த வாயு தங்கி, பின்னர் இரத்தத்தில் கலந்து, மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிறுபிள்ளைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் சோம்பலாக இருப்பர். பள்ளியில் பாடங்களை கவனிக்க இயலாத அளவுக்கு மனப்பாங்கு பாதிக்கப்படும்.

சுறுசுறுப்பு
அமர்ந்தே நேரத்தைக் கழிப்பது மற்றும் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வது என்ற வாழ்வியல் மாற்றங்களாலும் மலச்சிக்கலால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை பெருகியுள்ளது. நம் உடல் நன்றாக அசைந்தால் சிறுகுடல் வழியாக உணவு வேகமாக செல்லும். உடல் செயல்பாடு அதிகமாகும்போது இதய துடிப்பு அதிகரிக்கிறது; இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ஆகவே, சிறுகுடல் தசைகள் தூண்டப்படுகின்றன. ஒழுங்காக உடற்பயிற்சி செய்வது மலச்சிக்கலை தவிர்க்க உதவும். பெரிய அளவில் உடற்பயிற்சி செய்யவில்லையென்றாலும் நடப்பது, வீட்டை சுத்தம் செய்வது, மாடிப்படி ஏறி இறங்குவது போன்றவற்றை செய்தாலே மலச்சிக்கலை தவிர்க்கலாம்.

நார்ச்சத்து
நார்ச்சத்து அதிகமாக சேரும்போது குடல் சுவர்களிலுள்ள தசைகள் சுருங்கி விரிவதை அது தூண்டுகிறது. அதன் காரணமாக செரிக்கப்பட்ட உணவு நகருகிறது. அதிக காய்கறிகள், பழங்கள், பீன்ஸ் வகை காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் கொட்டை வகைகள் (நட்ஸ்) இவற்றை சாப்பிடுவது மலச்சிக்கலை தீர்க்கும். அளவுக்கதிகமாக சாப்பிடாமல் போதிய அளவு கவனமாக சாப்பிடவேண்டும்.

நீர்
போதிய அளவு நீர் பருகவில்லையென்றால் உடலில் ஏற்படும் பலவித குளறுபடிகளில் மலச்சிக்கலும் ஒன்று. உடலின் பல செயல்பாடுகள் செம்மையாக நடைபெற நீர்ச்சத்து அவசியம். தண்ணீர் குடலில் சேரும்போது மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது. சிறிதளவு நீர் குறைந்தாலும் மலச்சிக்கல் மூலம் அக்குறை வெளிப்படலாம். தினமும் 4 முதல் 5 லிட்டர் நீர் பருகினால் மலச்சிக்கல் ஏற்படாது.

You'r reading கான்ஸ்டிபேஷன் என்பது என்ன? அதன் விளைவு என்ன? எப்படி தவிர்க்கலாம்? Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை