சட்டமன்றத் தேர்தலில் திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகள் 13 தொகுதிகளில் திமுக சின்னத்தில் போட்டியிடுவதால், மொத்தம் 187 பேர் உதயசூரியனில் களம் காண்கின்றனர். தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தற்போது திமுக கூட்டணியில் முழுமையாக தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளது. இதன்படி, திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மேலும், காங்கிரஸ் 25, மார்க்சிஸ்ட் 6, இந்திய கம்யூனிஸ்ட் 6, ம.தி.மு.க 6, விடுதலை சிறுத்தைகள் 6, இந்திய யூனியன் முஸ்லிம்லீக் 3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3, மனிதநேய மக்கள் கட்சி 2, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை தலா ஒரு தொகுதி என்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை? என்று இன்று விவாதிக்கப்படுகிறது. இன்று மாலை யார், யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளது. இதைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகவுள்ளது.