தற்போது இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றுக்கான இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இரண்டு டோஸ்களாக போடப்படும் இத்தடுப்பூசியில் ஒரு தடுப்பூசிக்கான கால இடைவெளியை அதிகரிக்குமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எழுதியுள்ளது.
அஸ்ட்ராஜென்கா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் தற்போது இந்தியாவில் போடப்பட்டு வருகின்றன. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்ட பிறகு 28 நாள்கள் கழித்து அடுத்த டோஸ் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தேசிய தடுப்பூசி தொழில்நுட் ஆலோசனை குழு (NTAGI) மற்றும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி நிர்வாக வல்லுநர் குழு (NTAGI) ஆகியவற்றின் பரிந்துரையின் பேரில் முதல் மற்றும் இரண்டாம் டோஸ்களுக்கு இடைப்பட்ட கால இடைவெளியை மத்திய அரசு கூட்டி அறிவித்துள்ளது.
"தற்போதைய அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டதிலிருந்து 6 முதல் 8 வார கால இடைவெளியில் இரண்டாவது டோஸ் போடுவது பாதுகாப்பை அதிகரிக்கும் என்றும் தெரியவந்துள்ளது. ஆனால் 8 வாரங்கள் கழித்து இரண்டாவது டோஸை போடக்கூடாது" என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டவர்கள் 28 நாள்களுக்குப் பதிலாக 6 முதல் 8 வார இடைவெளிக்குள் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளவேண்டும். இந்த மாற்றம் கோவாக்சின் தடுப்பூசி போடுவோருக்குப் பொருந்தாது என்றும் கூறப்படுகிறது.