இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் அவசர கால பயன்பாட்டுக்கு கடந்த ஜனவரி 3-ம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி 16-ம் தேதி கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. முன்னுரிமை அடிப்படையில் ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கும், 2 கோடி முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டது.
தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்ததால் உலகளவில் இந்தியாவில்தான் அதிக பேருக்கு தடுப்பு மருந்து போடப்பட்டது. சமீபத்தில் கொரோனா தடுப்பூசியை 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் நாள்பட்ட நோய்களால் அவதிப்படும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் செலுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதே போல் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தடுப்பூசியை செலுத்த அனுமதியை மத்திய அரசு வழங்கியது.