ஸ்ட்ரோக் யாரைத் தாக்கும் ...அறிகுறிகள் என்ன என்ன?

பக்கவாதம்

by Kumaresan, Dec 3, 2017, 19:50 PM IST

னிதர்களுக்கு திடீரென உயிரிழப்பை ஏற்படுத்துவதில் மாரடைப்பு முக்கிய அபாய காரணியாக உள்ளது. சில நிமிடங்களுக்கு முன்பு வரை நன்றாக பேசிக் கொண்டிருந்தவர்கள் மாரடைப்பினால் பாதிக்கப்படுவது அல்லது இரவில் தூக்கத்திலேயே மாரடைப்பால் உயிர் போய் விடும் சம்பவங்களை நாம் அறிந்திருப்போம். இதே போல் 'மூளைத்தாக்கு' எனப்படும் ஸ்ட்ரோக் மனிதர்களுக்கு ஏற்பட்டால் ஆளையே முடக்கிப் போட்டு விடும் அல்லது உயிரை பறித்து விடும் அபாயமும் உண்டு.

பக்கவாதம் அறிகுறிகள்

இரண்டுமே ரத்த நாளங்களில் கொழுப்பு அல்லது இதர காரணத்தால் அடைப்பு உண்டாகி ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் ஏற்படுவதுதான். இதயத்துக்கு போகும் ரத்த நாளங்களில் அடைப்பு உண்டாகி ரத்த ஓட்டம் தடைபட்டு, அதனால் ஏற்படுவது மாரடைப்பு. மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு உண்டாகி ரத்த ஓட்டம் நின்று போனால் மூளைக்கு பிராணவாயு கிடைக்காமல் அதனால் உண்டாவது தான் ஸ்ட்ரோக். ரத்த ஓட்டம் இல்லாததால் மூளையின் எந்தப் பகுதி பிராணவாயு இல்லாமல் பாதிக்கப்படுகிறதோ, அதற்கேற்ப உடலின் வலது பக்கம், அல்லது இடது பக்கம் அல்லது உடலில் ஏதேனும் ஒரு பாகம் இழுத்துக் வைத்துக் கொள்வது போன்ற பாதிப்புகள் ஸ்ட்ரோக்கினால் ஏற்படுகிறது. இது சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுத்தி விடும் ஆபத்து இருக்கிறது.

நெஞ்சு வலி வந்தவர்களை எப்படி உடனே மருத்துவ சிகிச்சை அளித்தால் பெரும்பாலும் காப்பாற்றி விட முடியுமோ, அதே போல் தான் ஸ்ட்ரோக் தாக்கியதும் விரைவில் முறையான சிகிச்சை அளித்தால் அவர்களின் பாதிப்பை குறைத்து விட முடியும். ஆனால், ஸ்ட்ரோக் வந்துள்ளது என்பதை சரியாக அடையாளம் கண்டு துரிதமாக செயல்பட வேண்டியது மிக முக்கியமானது.

வட இந்தியாவில் மாலை நேர விருந்து நிகழ்ச்சிக்கு சென்ற ஜெனிஷா என்ற பெண் சட்டென தடுமாறி விழுந்து விட்டார். உடனே சுதாரித்துக் கொண்டு எழுந்து விட்ட அவர், 'தான் நன்றாக இருப்பதாகவும் தனக்கு அடி எதுவும் படவில்லை' என்றும் கூறினார். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய சற்று நேரத்திற்கெல்லாம் ஜெனிஷாவின் உடல்நிலை மோசடைய, பதறிய கணவர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். எனினும் சிகிச்சை பலனின்றி ஜெனிஷா இறந்து விட்டார்.

பிறகுதான் ஜெனிஷா திடீரென்று தாக்கிய ஸ்ட்ரோக் காரணமாக தடுமாறி கீழே விழுந்தது பின்னர்தான் தெரிய வந்தது. ஸ்ட்ரோக் என்று அடையாளம் கண்டு உஷாராகி இருந்தால், உடனே சிகிச்சை அளித்து, அவரது உயிரை காப்பாற்றி இருக்கலாம். ஸ்ட்ரோக் வந்த எல்லாருமே மரணமடைவதில்லை. ஆனால் உயிர் பிழைத்தவர்கள் அதன் பிறகு உடலின் ஒரு பகுதியோ அல்லது கணிசமான பகுதியோ முடங்கி விடுவதால் அவர்களுக்கு அதன் பிறகு வாழ்க்கையே நரகமாகி விடுகிறது. ஸ்ட்ரோக் வந்தாலும் இந்த நிலை ஏற்படாமல் தடுக்க வழியிருக்கிறது. அதற்கு சமயோசிதமாகவும், துரிதமாகவும் செயல்பட வேண்டிய முக்கியம்.

ஸ்ட்ரோக் வந்த ஒரு நோயாளிக்கு 3 மணிநேரத்துக்குள்ளாக உரிய சிகிச்சைகள் அனைத்தையும் வழங்கினால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை முற்றிலும் காணாமல் போகச் செய்து விடலாம். ஆனால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் போது, அவருக்கு ஸ்ட்ரோக் தான் வந்துள்ளது என்பதை அடையாளம் கண்டு உறுதிப்படுத்துவது, 3 மணிநேரத்துக்குள் அவருக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்கச் செய்வது மிக முக்கியமானது.

சில நேரங்களில் ஒரு ஸ்ட்ரோக் ஏற்பட்டிருப்பதை அடையாளம் காண்பது சிரமமானது. இதற்கு போதுமான விழிப்புணர்வு நமக்கு இல்லாததே காரணம். ஸ்ட்ரோக்கின் அடையாளங்களை கண்டு உணர தவறி விடும் போது, மூளைக்கு பிராணவாயு கிடைக்காமல் போவதால் அது கடுமையான சேதத்துக்கு உள்ளாகிறது. இதனால் பாதிக்கப்பட்டவரின் நிலை மோசமடைகிறது.

ஸ்ட்ரோக்கை அடையாளம் காண்பதற்கு மூன்று எளிய கேள்விகளை பாதிக்கப்பட்டவரிடம் கேட்க வேண்டும். இந்த முறை மருத்துவத்தில் எஸ்டிஆர் (STR) என்று குறிப்பிடப்படுகிறது. இதனை விளக்கமாக பார்ப்போம்.

எஸ் (S) * பாதிக்கப்பட்ட நபரை புன்னகைக்க (SMILE) கூற வேண்டும்.

டி (T) * ஒரு எளிய வாக்கியத்தை பேசுமாறு (TALK) அந்நபரிடம் கேட்க வேண்டும் (வார்த்தை கோர்வையாக இருக்க வேண்டும்).

ஆர் (R) * இரு கைகளையும் தூக்குமாறு (RAISE) அவரை கேட்க வேண்டும்.

இவைகளில் ஏதேனும் ஒன்றை செய்வதில் பாதிக்கப்பட்டவருக்கு சிரமம் இருந்தால், உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்வது மிக முக்கியமானது.

ஸ்ட்ரோக்கை கண்டறியும் மேற்குறிப்பிட்ட எச்சரிக்கை அடையாளங்களுடன் தற்போது புதிதாக ஒரு அடையாளத்தையும் மருத்துவர்கள் சேர்த்துள்ளனர். அதாவது பாதிக்கப்பட்டவரின் நாக்கை சோதித்தல்.பாதிக்கப்பட்டவரிடம் நாக்கை வாய்க்கு வெளியே நன்றாக நீட்டச் சொல்ல வேண்டும். அவரது நாக்கு கோணலாகி இருந்தால், அதாவது வாயின் ஒரு பக்கமாகவோ அல்லது மறுபக்கமாகவோ ஒதுங்கி கிடந்தால் அதுவும் அவருக்கு ஸ்ட்ரோக் தாக்கி உள்ளது என்பதன் அடையாளமாகும். உடனே தாமதமின்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்வது அவசியம்.

 

You'r reading ஸ்ட்ரோக் யாரைத் தாக்கும் ...அறிகுறிகள் என்ன என்ன? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை