ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான தேதி இன்றுடன் முடிவடைகிறது. இதில் நடிகர் விஷால் உள்பட பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
ஆர்.கே நகர் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபறெ உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் இறுதியில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் இன்று நிறைவுப் பெறுகிறது.
இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை அதிமுக சார்பில் வேட்பாளராக மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சுயேச்சையாக டி.டி.வி தினகரன் உள்ளிட்ட பலர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி என்ற நிலையில், பாஜக சார்பில் கரு.நாகராஜன், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளருமான ஜெ.தீபா, நடிகர் விஷால் ஆகியோர் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. மேலும், தாக்கல் செய்த வேட்புமனுக்களை வாபஸ் பெற வரும் 7ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, ஆர்.கே நகர் தொகுதியில் பல்வேறு இழுபறிக்குப் பின்னர், இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கிடையே நடிகர் விஷால் களத்தில் இறங்கியதால் போட்டி சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. நடிகர் விஷால் போட்டியிடுவதால் தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் மக்கள் மத்தியில் பெறும் எதிர்பார்பை பெற்றுள்ளது.