எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவிக்கு கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 12) பள்ளி விடுதியில் குழந்தை பிறந்தது. அக்குழந்தை ஞாயிறன்று உயிரிழந்தது. இது தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு துறையைச் சேர்ந்த சேவா ஆஸ்ரமம் உயர்நிலைப் பள்ளியில் 14 வயது மாணவி ஒருவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி தன் சொந்த ஊருக்குச் சென்று வந்தபோது பாலியல் நோக்கில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக அவர் கருவுற்றதாகவும் தெரிய வருகிறது.
மாணவிக்கு சனிக்கிழமை பிரசவம் நிகழ்ந்த நிலையில், வேறு வழியில்லாமல் பள்ளி மற்றும் விடுதி பொறுப்பாளர்கள் சிறுமியையும் குழந்தையையும் பாலிகுடாவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது பற்றி கேள்வியுற்ற கிராமத்தினர், சாலை மறியல் செய்துள்ளதால் விஷயம் வெளியே தெரிய வந்துள்ளது. மேற்சிகிச்சைக்காக பெர்ஹாம்பூர் மருத்துவமனைக்குச் சிறுமியும் அவள் குழந்தையையும் மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை குழந்தை உயிரிழந்தது. மாணவியின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.
இது தொடர்பாக தாரிங்படிஎன்ற ஊரிலுள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படிக்கும் ஷிரபான் பிரதான் என்ற மாணவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் விடுதி மேற்பார்வையாளர்கள், சமையலர் மற்றும் உதவியாளர் மற்றும் கண்காணிப்பாளர் என ஆறு பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதிக் சிங் தெரிவித்துள்ளார்.
பள்ளியின் தலைமை ஆசிரியை ராதாபாய் டாலேயும் மூன்று உதவி ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் சம்பவம் குறித்து சார் ஆட்சியர் விசாரித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பார் என்றும் மாவட்ட ஆட்சியர் பிருண்டா தெரிவித்துள்ளார்.
இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு மாநில தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் மாஜ்ஹி உத்தரவிட்டுள்ளார்.