கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நக்ஸல் பிரிவு சிறப்பு பணி ஆய்வாளரை அடித்து உதைத்ததாக உதவி வன அலுவலர் உள்ளிட்ட 14 வனத்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குலசேகரம் பகுதியில் நக்ஸலைட்டுகள் கண்காணிப்பு சிறப்பு பணியில் இருப்பவர் காவல் ஆய்வாளர் சாம்சன் (வயது 48). கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 12) அன்று இரவு பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கான பொருள்களுடன் மலைகிராமம் ஒன்றினுள் வாகனத்தில் நுழைய முயன்றபோது வன காவலர்கள் அவரது வாகனத்தை பறிமுதல் செய்ததோடு அபராதமும் விதித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் ஆய்வாளர் சாம்சனை தாக்கியுள்ளனர். இது குறித்து பல்வேறு பிரிவுகளில் குலசேகரம் காவல் நிலையத்தில் ஞாயிறன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்றபோது வனத்துறையினர் தம்மை தடுத்து நிறுத்தியதாகவும், வாகன சோதனை என்ற பெயரில் குழப்பம் ஏற்படுத்தியதாகவும், மறுநாள் ஞாயிறன்று தாமும் தன்னோடு வந்த ஒவ்வொருவருக்கும் மற்றும் வாகனத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவேண்டுமென்று வனத்துறையினர் கூறியதாகவும், அபராதத்தை செலுத்திய பிறகு வாகனத்தை எடுத்துச் செல்ல முயற்சித்தபோது மறுபடியும் தம்மை தடுத்து நிறுத்தி தாக்கியதாகவும், வனத்துறையினரின் தாக்குதலால் காயமுற்று குலசேகரன் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்றதாகவும் காவல் ஆய்வாளர் சாம்சன் கூறியுள்ளார்.
மாவட்ட வனத்துறை அதிகாரிகளோ, வனத்துறை வரம்புக்குட்பட்ட இடங்களில் உரிய அனுமதியின்றி ஆய்வாளர் சாம்சன் அடிக்கடி அத்துமீறி நுழைந்து வருகிறார். கடந்த ஞாயிறன்று அபராதம் உள்ளிட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கைகளே எடுக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை வாகன உரிமையாளர் ஓட்டிச் செல்ல அனுமதி கிடையாது. ஆனால், சாம்சன் அவராகவே வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு வாகனத்தை ஓட்டிச் செல்ல முயன்றதாலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.
வாகனத்தை எடுத்துச் செல்லும்படி குலசேகரம் காவல்நிலைய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரை யாரும் தாக்கவில்லை. நாங்கள் பறிமுதல் செய்த வாகனத்தை உரிய அனுமதியில்லாமல் ஓட்டிச் சென்றதால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.