அமேசானில் ஒரு கொட்டாங்குச்சி விலை ரூ.3000க்கு விற்பனை செய்யப்படுவதை கண்டு இந்திய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் அதிகரித்துவிட்டது. இதனால், ஆன்லைன் ஷாப்பிங் தளங்களும், ஆப்களும் அதை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது.
ஆரம்பத்தில் வெறும் துணிமணிகள் என தொடங்கி தற்போது குண்டூசி வரை ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக, உலகளவில் முன்னணியில் இருக்கும் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் ஆகிய ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் விற்பனைக்கான பொருட்களை குவித்து வைத்துள்ளனர். அவ்வபோது அதிரடி ஆப்பர்களும், இலவசங்களும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அறிவிக்கப்படுகிறது.
அந்த வகையில், சமீபத்தில் அமேசானில் ஒரு பொருள் விற்பனைக்கு போடப்பட்டிருப்பதை கண்டு வாடிக்கையாளர்கள் குறிப்பாக இந்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அப்படிப்பட்ட ஓர் அரிய பொருள் தான் கொட்டாங்குச்சி (தேங்காய் ஓடு). ஒரு கொட்டாங்குச்சியின் விலை ரூ.3000க்கு விற்கப்படுகிறது. இதன் ஆப்பர் விலை ரூ.1400. என்னது ஒரு கொட்டாங்குச்சியின் விலை ரூ.1400ஆ என வாடிக்கையாளர்கள் வாயை பிளந்துள்ளனர்.
மேலும், கொட்டாங்குச்சியை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சில நிபந்தனைகளும் விடுக்கப்பட்டுள்ளது. ஆம், கொட்டாங்குச்சி இயற்கையான முறையில் எடுக்கப்படுவதால் சேதம் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் என்ன வேடிக்கை என்றால், கொட்டாங்குச்சியை இவ்வளவு பணம் கொடுத்து சிலர் வாங்கியும் உள்ளனர். கொட்டாங்குச்சியை வாங்கியவர்கள் அது அவர்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்று ஸ்டார் ரேட்டிங் கொடுத்து கருத்தும் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான இந்தியர்கள் குறிப்பாக கிராமங்களில் கொட்டாங்குச்சியை இன்னமும் பயன்படுத்தி தான் வருகின்றனர். பலரது வீட்டு அடுப்பில் கொட்டாங்குச்சி சமையல் விறகாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேங்காயில் இருந்து கிடைக்கும் இந்த கொட்டாங்குச்சியை அசால்ட்டாக தூக்கிப்போட்ட நம் இந்தியர்களுக்கு இது ஒரு பேரதிர்ச்சிதான்.
கொட்டாங்குச்சியின் விலையைக்கண்ட நெட்டிசன்கள், இது தெரியாமல் கடந்த ஆண்டு பல கொட்டாங்குச்சிகளை தூக்கி எறிந்துவிட்டேனே.. இந்த கொட்டாங்குச்சிகள் மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் நான் கோட்டீஸ்வரன் ஆகியிருப்பேனே.. என்று நக்கலடித்து வருகின்றனர்.