கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. ஆனால் திமுக எம்.எல்.ஏ. பொன்முடிக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவர் போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதியின் பல பகுதிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கப்படுகிறது. இதற்கு காரணமே பொன்முடிக்கு எதிராக தொடர்ந்து அரசியல் செய்யும் அதே சூரிய கட்சியின் வடமாவட்டத்து பிரமுகர்தான் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
பேராசிரியர் பொன்முடிக்கும் அதேகட்சியின் வடமாவட்ட பிரமுகருக்குமான நிழல் யுத்தம் திமுகவினர் அறிந்த ஒன்றுதான். இது தொடர்பாக ஊடக செய்திகளுக்கு பொன்முடி விளக்கம் கொடுத்திருந்தாலும் இந்த மோதல் ஓயவில்லை.
பொன்முடி அமைதியாக இருந்தாலும் அவரை சீண்டும் வகையில் தொடர்ந்து இயங்குகிறாராம் வடமாவட்ட பிரமுகர். அண்மையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என அரசு அறிவித்தது.
இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொன்முடிக்கு நெருக்கடி தரும் வகையில் அவரது திருக்கோவிலூர் தொகுதியின் பல பகுதிகளை இணைத்துவிடுங்கள் என அதிமுக மேலிடத் தலைவர்களிடம் லாபி செய்திருக்கிறாராம் அந்த வடமாவட்ட பிரமுகர். இதனை அறிந்துதான் உடனடியாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளை விழுப்புரம் மாவட்டத்தில் சேர்க்கும்படி வலியுறுத்தினாராம் பொன்முடி.
மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை என்பது சரிதான் போல!
-எழில் பிரதீபன்