டெல்லியில் நடந்த 17வது சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டருக்கான இறுதி கட்டத்தை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார் சென்னையை சேர்ந்த டி. குகேஷ். இதன் மூலம் இவர் இந்தியாவின் 59வது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார்.
உலக அளவில் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டராகி சாதனை படைத்துள்ளவர் ரஷ்யாவின் செர்கே கர்ஜகின். இவர் தமது வயது 12 ஆண்டுகள் 7 மாதங்களாக இருந்தபோது இச்சாதனையை எட்டினார். தற்போது குகேஷின் வயது 12 ஆண்டுகள் 7 மாதங்கள் மற்றும் 17 நாள்களாகியுள்ளபடியால், 17 நாள்களில் அவர் மிகக்குறைந்த வயதுக்கான சாதனையை தவற விட்டுள்ளார். அதேவேளையில் இந்தியாவின் பிரக்னானந்தாவிடமிருந்து இந்தியாவின் இளவயது கிராண்ட் மாஸ்டர் இடத்தை கைப்பற்றியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த மறைந்த பாபி பிஸெர் மற்றும் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோரை தமக்கு மாதிரியாக கொண்டிருப்பதாகக் கூறும் குகேஷ், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனோ மற்றும் மும்பையில் நடந்த போட்டிகளில் இச்சாதனையை நடத்தும் வாய்ப்பை தவறவிட்டது தமக்கு வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளார்.
தற்போது உலக சதுரங்க அமைப்பில் 2497 ரேட்டிங் பெற்றிருக்கும் அவர், விஸ்வநாதன் ஆனந்த்துடன் விளையாடுவதற்கு தமக்கு விருப்பமிருப்பதாகவும், குப்பர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெறுவதற்காக தொடர்ந்து முயற்சிக்க இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.